உண்மையைப் பேசினால் கலகக்காரன் என்கின்றனர். அப்படியே இருந்து விட்டுப் போகிறேன் என்று கொல்கத்தா மாநாட்டில் பா.ஜ.க. எம்பியும் நடிகருமான சத்ருகன் சின்கா பா.ஜ.க.வை வெளுத்து வாங்கினார்.
சத்ருகன் பேசுகையில், கட்சிக்குள் இருந்து கொண்டே ஏன் எதிர்த்து பேசுறீர்கள் என்று கேட்கின்றனர். நான் உண்மையைத்தான் பேசுகிறேன். மோடி ஆட்சியில் வெற்று வாக்குறுதி மட்டுமேயன்றி எதையும் நிறைவேற்றவில்லை. இதனால் நாட்டு மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர்.புதிய தலைவரை தேர்வு செய்ய முடிவெடுத்துவிட்டனர். இப்போது தேர்தல் நேரத்தில் ஆதாயம் பெற ராமர் கோயில் பிரச்னையை மீண்டும் எடுக்கிறது பா.ஜ.க.. ஆனால் இது எடுபடாது.
இந்த உண்மைகளை எல்லாம் சொன்னால் என்னை கலகக்காரன் என்கின்றனர். அப்படியே கலகக்காரனாகவே இருந்து விட்டுப் போகிறேன் என்றார் சத்ருகன் சின்கா . இதே போன்று பா.ஜ.க.முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஷோரி பேசுகையில், நாட்டிலேயே அதிகம் பொய் சொன்ன பிரதமர் மோடி ஒருவர் தான். பா.ஜ.க.போட்டியிடும் தொகுதிகளில் எதிர்க்கட்சிகள் தரப்பில் ஒரே ஒரு வேட்பாளரை நிறுத்தி வீழ்த்த வேண்டும் என்றார்.
வாஜ்பாய் அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்த யஷ்வந்த் சின்கா பேசுகையில், அனைத்து துறைகளையும் மோடி அரசு சீரழித்துவிட்டது. நாட்டின் பொருளாதாரத்தை படு பாதாளத்துக்கு சென்று விட்டார் மோடி என தாக்கிப் பேசினார்.