இந்திராகாந்தி போல வசீகரமானவர், மக்களிடமும் அமோக செல்வாக்கு பெறுவார் பிரியங்கா என சிவசேனா கட்சி வர்ணித்துள்ளது.
பிரியங்கா காந்தியின் திடீர் அரசியல் பிரவேசம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரசார் மக்களவைத் தேர்தலில் இப்போதே வெற்றி உறுதி என்பது போல உற்சாகத்தில் குதிக்கின்றனர். பாஜக மற்றும் காங்கிரசுக்கு எதிரான கட்சிகளுக்கு பிரியங்காவின் வருகை நிச்சயமாக கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராகுல் அரசியலில் தோற்றுவிட்டதால் தங்கையை களமிறக்குகிறார் என்று பாஜக விமர்சித்துள்ளது. ஆனால் பாஜகவின் கூட்டணியில் இருந்து கொண்டே குடைச்சல் கொடுத்து வரும் சிவசேனாவோ பிரியங்காவை ஆஹா.. ஓஹோ என புகழ்ந்து தள்ளியுள்ளது. அப்படியே பாட்டி இந்திரா காந்தி போன்று வசீகரத் தோற்றம்.. மக்களை எளிதில் கவர்வார்.. அமோக செல்வாக்கு பெறுவார்.. காங்கிரசுக்கும் வெற்றி தேடித் தருவார் என்றெல்லாம் புகழ்ந்து தள்ளியுள்ளது சிவசேனா கட்சி .
இதேபோல் சரத் பவாரின் தேசியவாத காங்கிரசும் வரவேற்றுள்ளது. பிரியங்காவின் வருகையால் உ.பி.யில் காங்கிரசுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். 2009 தேர்தலில் உ.பி.யில் வென்றது போல் இந்தத் தேர்தலிலும் காங்கிரசுக்கு கூடுதல் இடங்கள் கிடைக்கும் என்று தேசியவாத காங்கிரஸ் கருத்து தெரிவித்துள்ளது.