பிப்ரவரி 1-ந்தேதி இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப் போவதாக நிதியமைச்சர் பியூஸ் கோயல் அறிவித்துள்ளார். காலையில் முழு பட்ஜெட் தாக்கல் என வெளியான தகவலுக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தற்போது பியூஸ் கோயல் இதனைத் தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆண்டில் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்படுவது மரபு. ஆனால் முழு நிதியாண்டுக்கான பட்ஜெட்டை பாஜக அரசு தாக்கல் செய்யப் போவதாக இன்று தகவல்கள் வெளியாகின. இதற்கு காங்கிரஸ் தரப்பில், மரபுகளை மீறுகிறது பாஜக அரசு என கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இந்தத் தகவல்களை மறுத்துள்ளார் மத்திய நிதியமைச்சர் பியூஸ் கோயல். முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதாக வெளியாகும் செய்திகள் உண்மையல்ல. பிப்ரவரி 1-ந்தேதி இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்படும். இடைக்கால பட்ஜெட்டில் எந்த புதிய அறிவிப்புகளோ, சலுகைகளோ இடம் பெறாது என பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.