கேதர் ஜாதாவுக்கு மீண்டும் அட்வைஸ் கொடுத்து விக்கெட் எடுத்துள்ளார் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி.
நியூசிலாந்து அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் இந்திய அணி அபார வெற்றிபெற்று ஒருநாள் தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. நேற்றைய போட்டியில் பேட்டிங்கில் அசத்திய அம்பதி ராயுடு, தமிழக வீரர் விஜய் சங்கர் வெற்றிக்கு வித்திட்டனர். அவர்களைப் போல வெற்றிக்கு மற்றொரு காரணமாக அமைந்தவர் முன்னாள் கேப்டன் தோனி. நியூசிலாந்து வீரர்கள் அனைவரும் அவுட் ஆக ஜேம்ஸ் நீஷம் மட்டும் தாக்குப்பிடித்து களத்தில் இருந்தார். இந்தியாவின் பந்துவீச்சை சமாளித்து ஆடி 44 ரன்கள் சேர்த்திருந்தார்.
இவரின் விக்கெட்டை எடுக்க தோனி ஐடியா கூறினார். ஸ்டெம்புக்குப் பின்னால் நின்றுகொண்டு, பௌலர்களுக்கு ஐடியா கொடுப்பது தோனியின் வழக்கம். இந்திய பௌலர்கள் சஹால், குல்தீப், அஷ்வின் இதனை பலமுறை தெரிவித்திருக்கின்றனர். அதேபோல் நேற்றைய போட்டியிலும் தோனியின் ஐடியா படி பந்துவீசினார். அப்போது நீசமை விரைவாக ரன் அவுட் செய்து வெளியேற்றினார். இந்த வீடியோ காட்சிகள் வலைதளங்களில் வைரலாகின.
அதைவிட கேதர் ஜாதாவுக்கு மராத்தி மொழியில் பேசி தோனி ஐடியா கொடுத்துள்ளார். எப்போதும் இந்தியில் பேசி அறிவுரை கூறும் தோனி, இந்த முறை ஜாதவ்வின் தாய்மொழியான மராத்தியில் பேசி அசத்தினார். ``மீண்டும் மீண்டும் ஒரேபோல் வீசாதே... அவரின் விக்கெட்டை எடு" என தோனி மராத்தியில் பேசுவது அங்கிருந்த மைக்கில் பதிவாகியது. இந்தச் செய்தியை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஜாதவ், ``தோனி ஸ்டெம்புக்கு பின்னாடி இருக்கும் போது வெளிநாடாக இருந்தாலும் அது சொந்த நாடு போன்ற உணர்வு இருக்கும். தோனி மராத்தியில் பேசியது உண்மையிலே எனக்கு பெரிய சர்ப்ரைஸாக இருந்தது" என்று நெகிழ்ந்துள்ளார். ஏற்கனவே, `தோனி எங்கு பந்துவீச சொன்னாலும், அங்கு கண்ணை மூடிக்கொண்டு வீசுவேன்" எனக் கேதர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.