காந்தி நினைவுநாளில் அவருடைய உருவப்பொம்மையை சுட்டுக் கொண்டாட்டம் நடத்திய இந்து மகாசபா பெண் நிர்வாகி பூஜா பாண்டே கணவருடன் கைது செய்யப்பட்டார்.
கடந்த ஜனவரி 30-ந் தேதி தேசப்பிதா காந்தியின் 71-வது நினைவு தினத்தை நாடே துக்க தினமாக அனுசரித்தது. அதே நாளில் உ.பி.யின் அலிகாரில் இந்து மகா சபா அமைப்பினர் காந்தியின் உருவப்பொம்மையை செய்து கைத்துப்பாக்கியால் சுட்டு விளையாடினர். மேலும் காந்தியைச் சுட்டுக்கொன்ற கோட்சேவின் படத்தை அலங்கரித்து கொண்டாட்டம் நடத்தினர். இதையெல்லாம் செய்தது இந்து மகா சபா பெண் நிர்வாகியான பூஜா பாண்டே தலைமையிலான குழுவினர் தான்.
இந்து மகாசபா வினரின் இந்தச் செயலுக்கு நாடு முழுவதும் பெரும் கண்டனம் எழுந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான பூஜா பாண்டேயை தேடி வந்த நிலையில் தற்போது கணவர் அசோக் பாண்டேயுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.