சாரதா சிட்பண்ட் ஊழல் தொடர்பாக கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்த 5 அதிகாரிகள் குழுவை சிபிஐ தயார் செய்துள்ளது.
சாரதா சிட்பண்ட் ஊழல் தொடர்பான விசாரணைக்கு கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ஒத்துழைக்கவில்லை எனக் கூறி அவருடைய வீட்டில் சோதனை நாத்த சிபிஐ அதிகாரிகள் சென்றனர். இதை மாநில போலீசாரைக் கொண்டு தடுத்ததுடன் சிபிஐ அதிகாரிகளையும் கைது செய்தது மம்தா அரசு. மேலும் சிபிஐ-ஐ மத்திய அரசு ஏவி விடுகிறது .மாநில உரிமைகள் பறி போகிறது என்று மம்தா தர்ணா நடத்தினார்.
இந்தப் பிரச்னையில் உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் முறையிடப்பட்டது. போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமார் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கிறார். ஊழல் தொடர்பான ஆவணங்களை தர மறுக்கிறார். தடயங்களை அழிக்கப் பார்க்கிறார் என்று சிபிஐ தரப்பு குற்றச்சாட்டு வைத்தது. இதனை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்த அனுமதித்ததுடன், ராஜீவ்குமாரை கைது செய்யக் கூடாது என்றும் உத்தரவிட்டார். ராஜீவ்குமாரும் விசாரணைக்கு ஒத்துழைக்க சம்மதம் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து விசாரணையை மேகாலயா மாநிலத் தலைநகர் ஷில்லாங்கில் நடத்த முடிவு செய்யப் பட்டுள்ளது. டெல்லியில் சிபிஐ இயக்குநர் அலுவலகத்தில் நடந்த ஆலோசனையில், ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்த பர்தன் என்ற அதிகாரி தலைமையில் 5 சிபிஐ அதிகாரிகள் குழுவும் நியமிக்கப்பட்டது. ஷில்லாங்கில் ராஜீவ் குமாரிடம் விரைவில் விசாரணை றடைபெற உள்ளது.