இந்தியாவில் வாட்ஸ் அப் மூலம் அவதூறு,பொய் பிரச்சாரம் செய்வதில் அரசியல் கட்சிகள் அத்துமீறுகின்றன. இதே நிலை தொடர்ந்தால் இந்தியாவில் வாட்ஸ் அப் தடை செய்யப்படும் என அந்நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலகம் முழுவதும் வாட்ஸ்அப் பயன்பாடு அதிகரித்து வருகிறது. எளிதில் தொர்பு கொள்ளுதல், ஒட்டு மொத்தமாக செய்திகளை பரப்புதல் எளிது என்பதால் நாளுக்கு நாள் இதன் பயன்பாடு அதிகரித்து வருகிறது. எந்தளவுக்கு நல்ல விஷயங்களுக்கு பயன்படுகிறதோ அதே அளவுக்கு வாட்ஸ்அப் மூலம் பல்வேறு அவதூறு மற்றும் பொய்ப் பிரசாரமும் செய்யப்படுகிறது.
வாட்ஸ் அப்பை உலக அளவில் 150 கோடிப் பேர் பயன்படுத்துகின்றனர் இந்தியாவில் மட்டும் 20 கோடி பேர் பயன்படுத்தி இந்தியா முதலிடம் வகிக்கிறது. அதே போல் வாட்ஸ்அப்பை தவறாகப் பயன்படுத்துவதில் இந்திய அரசியல் கட்சிகள் தான் உலக அளவில் முதலிடம் வகிக்கின்றன. இது குறித்து வாட்ஸ் அப் கடந்த ஆண்டே அரசியல் கட்சிகளுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனாலும் கடந்த ஆண்டு இறுதியில் கடந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவும், காங்கிரசும் தேர்தல் பிரச்சாரத்திற்காக, ஒருவர் மீது ஒருவர் அவதூறு பரப்புவதற்காக பெருமளவில் வாட்ஸ் அப் பயன்படுத்தியுள்ளது அந்நிறுவனத்துக்கு பெரும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் மக்களவைத் தேர்தல் நெருங்கும் வேளையில் இந்திய அரசியல் கட்சிகளுக்கு வாட்ஸ்அப் நிறுவனம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வாட்ஸ் அப் தலைமை நிர்வாகி கார்ல் ஊக்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில், வாட்ஸ் அப் ஒன்றும் ஒளிபரப்பு சாதனம் அல்ல. வாக்காளர்களைக் கவர இந்திய அரசியல் கட்சிகள் பிரச்சாரம், மொத்தமாக செய்திகளை, அவதுறு களை பரப்புவது கவலை அளிக்கிறது. பல முறை எச்சரித்தும் இந்திய அரசியல் கட்சிகள் கண்டுகொள்ளாதது வருத்தமளிக்கிறது.
இதே போன்று பிரேசிலில் தேர்தலின் போது வாட்ஸ் அப்பை தடை செய்ய நேரிட்டது. அதே போன்ற நிலைப்பாட்டை இந்தியாவிலும் எடுக்க வேண்டியிருக்கும் என எச்சரித்துள்ளார்.
வாட்ஸ்அப்பை தவறாக பயன்படுத்துவோரை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், மாதத்துக்கு 20 லட்சம் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு வருவதாகவும் கார்ல் ஊக்ஸ் தெரிவித்துள்ளார்.