தேர்வு காலம்: தவிர்க்க வேண்டியவையும் தவிர்க்கக்கூடாதவையும்

5 things that will make a student appearing for board exams hate you

by SAM ASIR, Feb 8, 2019, 09:37 AM IST
பொதுவாக பள்ளி மாணவ மாணவியருக்கு பிப்ரவரி முதலான மாதங்கள் தேர்வு காலம்.
அரசு தேர்வாகட்டும், ஆண்டு தேர்வாகட்டும் பிள்ளைகளை விட பெற்றோரே அதிக மனஅழுத்தத்தில் இருக்கின்றனர்.
 
எதிர்கால பயம் என்று ஒன்றை அறியாத பிள்ளைகள் மனதில் எதை எதையோ போட்டு குழப்புவது பெரியவர்களுக்கு வழக்கமாக இருக்கிறது.
மனதை ஒருமுகப்படுத்தி, கவனம் செலுத்தி படிக்க வேண்டியது அவசியம்தான். ஆனால், ஏதோ அசம்பாவிதம் நிகழ்ந்துவிடும் என்பதுபோல மன அழுத்தத்தோடு அலைவது உடல்நலத்திற்கும் பாதிப்பு ஏற்படுத்தும்.
 
பெற்றோரின் புலம்பல்களும் உண்மை நிலையும்
'இதுதான் உன் வாழ்க்கையை தீர்மானிக்கிற விஷயம்'
அரசு பொதுத் தேர்வில் மிக உயர்ந்த மதிப்பெண்கள் பெற்றிருந்தபோதிலும் இன்னும் திருப்தியான நிலையை எட்டாத, பார்க்கும் வேலையை குறித்து மகிழ்ச்சியுராத எத்தனையோ பேர் உள்ளனர். நல்ல மதிப்பெண்கள் எடுப்பது முக்கியம்தான். ஆனால், அதுவே வாழ்க்கையை அமைத்து தந்து விடாது. சாதனை புரிவதற்கு உயர்மதிப்பெண்கள் மட்டுமே போதாது. ஆகவே, தேவைக்கு அதிகமாக அதைக்குறித்து கவலைப்பட வேண்டாம்.
 
"உன் ஃப்ரண்டு உடைய அம்மாவை பார்த்தேன். அவள் தினமும் பதினெட்டு மணி நேரம் படிக்கிறாளாம்"
ஒவ்வொரு மனித உயிரும் வெவ்வேறு விதமான தன்மை கொண்டது. எல்லோருக்கும் ஒரே மூச்சில் உட்கார்ந்து படிக்கிற ஆற்றல் இருக்காது. "அவனைப் போல படி.. அவளைப் போல தயாராகு..." என்பதல்ல; "உன்னால் முடிந்த அளவுக்கு முயற்சி செய்" என்பதே பிள்ளைகளுக்கான சரியான வழிகாட்டல். 
"வருஷம் முழுவதும் ஒழுங்காக படித்திருந்தால் இப்போது கஷ்டம் இருந்திருக்காது"
நம்மால் மாற்ற முடியாத முடிந்து போன காரியங்களை பேசி எந்தப் பயனுமில்லை. ஆகவே, இப்போது என்ன செய்ய முடியும் என்று மட்டுமே யோசிப்பது நல்லது.
"இதுவரைக்கும் எத்தனை பாடம் படித்துள்ளாய்? படித்தது எல்லாவற்றையும் திரும்ப பார்த்துவிட்டாயா?"
 
இந்தக் கேள்வி பயத்தையும் பதற்றத்தையும் உருவாக்கும். அரக்க பறக்க பாடங்களை படிப்பதை விட உரிய நேரமெடுத்து நிதான படிப்பதே மனதில் பதிய வைக்கும். கேள்வி கேட்டு பிள்ளைகளை விரட்டாதீர்கள்
"டி.வி பக்கம் எட்டி கூட பார்க்காதே"
சில வீடுகளில் தேர்வை காரணம் காட்டி கேபிள் இணைப்பை கூட துண்டித்து விடுகிறார்கள். நாள் முழுவதும் படிக்கும் பிள்ளைக்கு மனதை புதுப்பிக்க ஏதாவது ஒரு வித்தியாசம் தேவை. அதிக கெடுபிடி காட்டாமல், அதேவேளையில் தொலைக்காட்சி பார்ப்பதில் மூழ்கிவிடாமல் அனுமதிக்கலாம். அது மூளைக்கும் சிறிது இளைப்பாறுதலை கொடுத்து புத்துணர்வு அளிக்கும்.
உடல்நல குறிப்புகள்"
 
உடற்பயிற்சி: படித்து படித்து களைப்படைந்த மூளைக்கு போதுமான ஆக்ஸிஜன் தேவை. அதற்கு உடற்பயிற்சிகள் உதவும். எளிதான உடற்பயிற்சிகள் கல்வி கற்பதற்கு ஏற்ற உடல்நிலையை தரும். ஆகவே, தேர்வு நேரத்திலும் எளிய உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். உடலுக்கு மட்டுமல்ல, மூளைக்கும் இது புத்துணர்வு தரும்.
 
ஆரோக்கியமான உணவு: காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள், பால் சார்ந்த பொருள்கள், மீன் மற்றும் முட்டை ஆகியவை உடலுக்கு சத்து தரும் நல்ல உணவுகள். பாடங்களை படிப்பதற்கு உடலுக்கு ஊட்டம் அவசியம். தேர்வு நேரத்தில் உடல் பெலவீனமடைவதை தவிர்ப்பதற்கு சத்தான ஆகாரங்கள் சாப்பிடுவது அவசியம். சாப்பிடுகிறேன் என்று வெளியில் வாங்கி உண்டு உடலை கெடுத்துக் கொள்ள வேண்டாம்.
போதுமான தூக்கம்: படிக்கும் மும்முரத்தில் பலர் உறங்க கூட மறந்து விடுவார்கள். ஒரு நாளைக்கு ஆறு முதல் எட்டு மணி நேர தூக்கம் உடலுக்கு அவசியம். ஆழ்ந்து உறங்குவதால் மூளைக்கு ஓய்வு கிடைக்கும். நன்றாக உறங்கி எழுந்து படித்தால், பாடங்களை மனம் எளிதாக உள்வாங்கி கொள்ளும். உறக்கம் தவிர்த்த இரவுகள், உடலையும் மனதையும் களைப்புறச் செய்யும்.
 
பலன் தரும் கீரை: நினைவு திறன் மற்றும் புத்திக்கூர்மையை அதிகரிப்பதில் வல்லாரை கீரை நல்ல பலன் தருவதாக இயற்கை நலம் குறித்த ஆய்வுகள் தெரிவிப்பதாக கூறப்படுகிறது. மனதுக்கு புத்துணர்வு அளித்து, தெளிவாக சிந்திக்கும் திறனை வல்லாரை கீரை தருகிறது. மூளை தொடர்பான வேதியியல் மாற்றங்களை இக்கீரை ஊக்குவிப்பதால், கல்வி கற்கும் பிள்ளைகளுக்கு இது அருமருந்தாகும்.
அச்சம் தவிர்த்து உச்சம் தொட வாழ்த்துகள்!

You'r reading தேர்வு காலம்: தவிர்க்க வேண்டியவையும் தவிர்க்கக்கூடாதவையும் Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை