நாடாளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கி நாடு காத்துக்கொண்டிருக்கிறது. வலுவான பாஜகவை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகள் மெகா கூட்டணியை அமைத்துக்கொண்டிருக்கிறது. இந்த மெகா கூட்டணியில் முதலில் உத்தரபிரதேச தலைவர்களான அகிலேஷ் - மாயாவதி இணைவார்கள் எனப் பேசப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் காங்கிரஸுக்கு நைசாக கழட்டிவிட்ட இவர்கள், தலா 38 தொகுதிகளை பிரித்து கூட்டணியை உறுதி செய்து தேர்தலுக்கு தயாராகி வருகின்றனர். இந்த திடீர் கூட்டணி முறிவுக்கு அவர்கள் சொல்லிய காரணம் என்ன தெரியுமா? ``காங்கிரஸால் எங்களுக்கு எந்த பயனும் இல்லை. அதனாலேயே காங்கிரஸுடன் கூட்டணி சேரவில்லை" எனக் கூறினர். இவர்களின் புதிய கூட்டணியால் உத்தரபிரதேசத்தில் பாஜக, காங்கிரஸுக்கு எதிரான அலை வீச தொடங்கியது.
மத்தியில் ஆட்சி அமைக்க உத்தர பிரதேசத்தில் பெரும் வெற்றி மிக முக்கியமானது காரணம் அங்குள்ள 80 நாடாளுமன்றத் தொகுதிகள். இதனால் அங்கு வலுவான இடத்தை பெற தீர்மானித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தனது சகோதரி பிரியங்கா காந்தியை உத்தரபிரதேசத்தில் களமிறங்கினார். அம்மாநிலத்தின் கிழக்குப் பகுதி காங்கிரஸ் பொதுச்செயலாளராக பிரியங்கா நியமிக்கப்பட்டார். இதுவரை நேரடி அரசியலில் ஈடுபடாத பிரியங்காவின் வருகை பாஜக, அகிலேஷ், மாயாவதி கட்சிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரியங்காவின் வருகையை உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கு புதிய உத்வேகத்தை கொடுத்துள்ளது. இன்று தனக்கு கொடுப்பட்ட பொதுச்செயலாளர் பதவியை ஏற்கிறார் பிரியங்கா.
இதனை முன்னிட்டு இன்று மதியம் காங்கிரஸ் தொண்டர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியை கொடுத்தது கட்சித் தலைமை. அது வேறுஒன்றும் அல்ல. இன்று மதியம் 12 மணியளவில் காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில், ``இன்று முதல் பிரியங்கா காந்தியை டுவிட்டரில் தொடரலாம்" என்று அவரை வலைபக்கத்தை பதிவிட்டது. அதன்படி அதிகாரபூர்வமாக இன்று முதல் பிரியங்கா டுவிட்டரில் இணைந்தார். priyanka gandhi vadra என்ற பெயரில் இணைந்துள்ள அவரை காங்கிரஸ் தொண்டர்கள் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றுள்ளனர். ஆம், டுவிட்டரில் இணைந்து எட்டு மணி நேரத்துக்குள் சுமார் 98 ஆயிரம் பேர் பின்தொடர ஆரம்பித்துள்ளனர். இது எந்த ஒரு நடிகருக்கும், எந்த நடிகைக்கும் கிடைக்காத வரவேற்பு எனப் பேசப்படுகிறது. இவ்வளவு பெரிய வரவேற்பு பிரியங்காவுக்கு கிடைத்த உற்சாகத்தில் காங்கிரஸ் கட்சி மூழ்கியுள்ளது.