சிபிஐ இணை இயக்குநருக்கு ஒரு நாள் சிறை - கோர்ட் அறை மூலையில் அமர வைத்து உச்சநீதிமன்றம் நூதன தண்டனை!

supreme court convicts CBI addl director for contempt of court

by Nagaraj, Feb 12, 2019, 15:10 PM IST

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிபிஐ இணை இயக்குநர் நாகேஸ்வரராவுக்கு ஒரு நாள் சிறைத் தண்டனை விதித்த உச்ச நீதிமன்றம், கோர்ட் அறை மூலையில் நாள் முழுவதும் அமருமாறு உத்தரவிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிபிஐ இணை இயக்குநராக இருப்பவர் நாகேஸ்வர ராவ். இயக்குநராக இருந்த அலோக் வர்மா மத்திய அரசால் விடுப்பில் அனுப்பப்பட்ட போதும், இடமாறுதல் செய்யப்பட்ட போதும் சிபிஐயின் தற்காலிக இயக்குநராகவும் இருந்தவர் நாகேஸ்வர ராவ்.

பீகார் மாநிலம் முசாபர்பூர் ஆதரவற்றோர் மையத்தில் பாலியல் கொடுமைகள் நடந்தது தொடர்பான வழக்கு விசாரணையை சிபிஜ இணை இயக்குநர் அருண்குமார் சர்மா விசாரித்து வந்தார். அருண்குமாரை திடீரென இடமாற்றம் செய்ய நடந்த முயற்சிக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்திருந்தது.

ஆனால் நாகேஸ்வர ராவ் தற்காலிக இயக்குநராக இருந்த போது உச்ச நீதிமன்ற உத்தரவையும் மீறி அருண்குமாரை ரிசர்வ் போலீஸ் படைப்பிரிவுக்கு மாறுதல் செய்தார்.

இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நாகேஸ்வர ராவ் மற்றும் சிபிஐ வழக்கறிஞரை நேரில் ஆஜராகுமாறு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு உத்தரவிட்டிருந்தது. இன்று இருவரும் ஆஜராகி நீதிமன்ற உத்தரவை அவமதித்ததற்கு பகிரங்க மன்னிப்பு கோரினர்.

ஆனாலும் இதனை ஏற்காத உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், தவறு தவறுதான், மன்னிக்க முடியாத தவறுக்கு தண்டனை தான் தீர்வு என்று கூறி இருவருக்கும் கோர்ட் கலையும் வரை ஒரு நாள் சிறை, ரூ 1 லட்சம் அபராதம் என தீர்ப்பளித்தனர்.

சிபிஐ இணை இயக்குநர் நாகேஸ்வர ராவ் 32 ஆண்டு காலப் பணியில் எந்த சர்ச்சையிலும் சிக்காத நல்ல அதிகாரி. இந்தத் தண்டனை அவருக்கு களங்கம் ஏற்படுத்தி விடும் என்பதால் மன்னிப்பை தண்டனையை ரத்து செய்யுமாறு மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் நீதிபதிகளிடம் முறையிட்டார்.

இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள் கோர்ட் கலையும் வரை அறையின் ஓரமாக அமருமாறு கண்டிப்பு காட்டினர். சமீப காலமாகவே சிபிஐ விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையாகி உள்ள நிலையில் உச்ச நீதிமன்றத்தின் இந்த அதிரடித் தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You'r reading சிபிஐ இணை இயக்குநருக்கு ஒரு நாள் சிறை - கோர்ட் அறை மூலையில் அமர வைத்து உச்சநீதிமன்றம் நூதன தண்டனை! Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை