மோடியே மீண்டும் பிரதமராக வரவேண்டும் என்பது என் ஆசை என்று மக்களவையில் பேசி மகன் அகிலேஷ் யாதவுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார் முலாயம்சிங் யாதவ்.
சமாஜ்வாதி கட்சியை ஆரம்பித்து உ.பி.முதல்வராக, மத்திய அமைச்சராகவும் இருந்து அசைக்க முடியாத சக்தியாக திகழ்ந்தவர் முலாயம் சிங் . அவர் தற்போது மக்களவை எம்.பி.யாகவும் உள்ளார். முலாயமுக்கு வயதாகிவிட்டதை காரணம் காட்டி திடீரென சமாஜ்வாதி கட்சியை தன் பிடிக்குள் கொண்டு வந்தார் அவரது மகன் அகிலேஷ் யாதவ்.
இதனால் இருவருக்கும் இடையே குடும்பச் சண்டையாகி வீதிக்கு வந்து சந்தி சிரித்த வரலாறும் உண்டு. நீதிமன்றத்தில், தேர்தல் ஆணையத்தில் பஞ்சாயத்து நடந்து அகிலேஷூக்கு தீர்ப்பு சாதகமாக தனிமரமானார் முலாயம்.
தற்போது மக்களவைத் தேர்தலில் உ.பி.யில் மாயாவதியுடன் சேர்ந்து மோடிக்கு எதிராக வரிந்து கட்டிக் கொண்டிருக்கிறார் அகிலேஷ் யாதவ். இந்நிலையில் தான் மக்களவையின் கடைசி நாளில் மோடிக்கு ஆதரவாக முலாயம்சிங் பேசியது அனைவரையும் ஆச்சர் யத்தில் ஆழ்த்த, மகன் அகிலேஷ் யாதவுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.
நாட்டுக்கு பல நல்ல திட்டங்கள் கொண்டு வந்த பிரதமர் மோடியை பாராட்டுகிறேன். இப்போதுள்ள எம்.பிக்கள் மீண்டும் ஜெயித்து மக்களவைக்கு வர வேண்டும் என வாழ்த்துகிறேன். பிரதமராக மீண்டும் மோடி வரவேண்டும் என்றும் ஆசைப்படுகிறேன் என்று முலாயம் பேசியபோது எம்.பி.க்கள் அனைவரும் அவரை ஆச்சர்யமாகப் பார்த்தனர். ஆனால் அவரது மகன் அகிலேஷ் யாதவுக்கே இந்தப் பேச்சு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.