ஒரு மாதமாக ஹாயாக உலா வந்த சின்னத்தம்பி யானையை துன்புறுத்தாமல் பத்திரமாக பிடிக்க வனத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
கோவை, திருப்பூர் மாவட்ட கிராமங்களில் கடந்த ஒரு மாதமாக அமைதியாக உலா வந்த சின்னத்தம்பி யானை கிட்டத்தட்ட அந்தப் பகுதி மக்களின் கதாநாயகனாகவே மாறிப் போனான். யாருக்கும் தொந்தரவு செய்யாமல் சின்னத்தம்பி செய்யும் சேட்டைகளைக் காண சுற்றுலா செல்வது போல் கூட்டம் தினமும் கூடி விடுகிறது.
ஆனால் விளை நிலங்களில் புகுந்து நெல், வாழை, கரும்பு பயிர்களை சேதப்படுத்துவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். வனத்துறையினர் இரவு, பகலாக கும்கி யானைகளைக் கொண்டு பிடிக்க முயன்ற போது கும்கிகளையே நண்பர்களாக்கி சாதுர்யமாக தப்பித்து வந்தான் சின்னத்தம்பி.
வனத்துறையினர் செய்வதறியாது திகைக்க, சின்னத்தம்பியை கும்கி யாக மாற்றப் போவதாக அரசுத் தரப்பில் செய்திகள் வெளியாக, வன ஆர்வலர்களோ அதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குப் போட்டனர்.
பல்வேறு தரப்பு விசாரணைக்குப் பின் சின்னத்தம்பி யானையை பிடிக்க உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. துன்புறுத்தாமல், பத்திரமாக பிடித்து வைக்கும்படி நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.
சின்னத்தம்பியை வனத்திற்குள் விடுவதா? முகாமில் கொண்டு விடுவதா? என்பது குறித்து நாளை முடிவு செய்யப்படும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டதைத் தொடர்ந்து வனத்துறையினர் நிம்மதி அடைந்து மீண்டும் சின்னத்தம்பி வேட்டைக்கு தயாராகி விட்டனர்.