புதுச்சேரியில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக முதல்வர் நாராயணசாமி 2-வது நாளாக தர்ணா போராட் டத்தை தொடர்கிறார். விடிய விடிய ஆளுநர் மாளிகை முன் முற்றுகையில் ஈடுபட்டதால் அதிரடிப்படை, துணை ராணுவம் உதவியுடன் கிரண்பேடி வெளியேறி டெல்லி புறப்பட்டார்.
புதுச்சேரி துணை நிலை ஆளுநராக கிரண்பேடி நியமிக்கப்பட்டது முதலே முதல்வர் நாராயணசாமியுடன் அதிகார மோதலில் ஈடுபட்டு வருகிறார். இதனால் இருவருக்குமிடையே சர்ச்சைகள் அடிக்கடி வெடிக்கிறது.சமீபத்தில் கட்டாய ஹெல்மெட் சட் டத்தை அமல்படுத்திய பேடி, சாலையில் இறங்கி நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
ஹெல்மெட் அணியாதவர்களிடம் கடுமை காட்டிய கிரண்பேடி, பைக், ஸ்கூட்டர் வாங்க காசு இருக்கிறது... பெட்ரோல் போட காசு இருக்கிறது.. ஹெல்மெட் வாங்க முடியவில்லையா? என்றெல்லாம் கேள்வி கேட்டு அபராதம் விதித்தார்.
கிரண்பேடியின் இந்த நடவடிக்கைக்கு முதல்வர் நாராயணசாமி மற்றும் திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட் என அனைத்துக் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. கிரண்பேடியின் நடவடிக்கையைக் கண்டித்து ஆளுநர் மாளிகை நோக்கி முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் கட்சித் தொண்டர்களுடன் கண்டனப் பேரணி நடத்தினார்.
பேரணி முடிந்தவுடன் ஆளுநர் மாளிகை தர்ணாவில் அமர்ந்து விட்டனர். இரவிலும் முற்றுகை தொடர்ந்தது. பனியில் வெட்ட வெளியில் படுத்து உறங்கினர். இன்றும் தர்ணா போராட்டம் தொடர்வதால் அதிரடிப்படை, மத்திய பாதுகாப்புப் படையினர் பெருமளவில் குவிக்கப்பட்டு புதுச்சேரியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
இந்நிலையில் இன்று காலை ஆளுநர் மாளிகையின் அனைத்து வாயில்கள் முன்பும் முற்றுகையில் நாராயணசாமி, அமைச்சர்கள் ஈடுபட்டிருந்த நிலையில் அதிரடிப்படையினர் புடைசூழ காரில் வெளியேறிய கிரண்பேடி சென்னை கிளம்பினார். சென்னையிலிருந்து விமானம் மூலம் டெல்லி செல்வதாகவும் புதுச்சேரி நிலவரம் குறித்து உள்துறை அமைச்சகத்திடம் அறிக்கை தாக்கல் செய்வார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.