இந்தியாவின் பெரும் தொழில் அதிபர் அனில் அம்பானி மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதியின் உத்தரவில் திருத்தம் செய்த நீதிமன்ற பதிவாளர்கள் 2 பேர் அதிரடியாக டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர்.
எரிக்சன் நிறுவனத்திற்கு அனில் அம்பானி செலுத்த வேண்டிய ரூ 550 கோடியை உச்ச நீதிமன்றம் கொடுத்த அவகாசத்தில் திருப்பிக் கொடுக்காததால் நீதிமன்ற அவமதிப்பு தொடரப்பட்டது. இதில் அனில் அம்பானி நேரில் ஆஜராக உச்ச நீதிமன்ற நீதிபதி நாரிமன் உத்தரவு பிறப்பித்திருந்தார். அதன்படி கடந்த 2 நாட்களாக உச்ச நீதிமன்றத்தில் அனில் அம்பானி ஆஜராகி வருகிறார்.
அனில் அம்பானி நேரில் ஆஜராக வேண்டும் என்ற உத்தரவை கடந்த 7-ந் தேதி பிறப்பித்திருந்தார். உச்சநீதிமன்ற இணையதளத்தில் இந்த உத்தரவை பதிவிடும் போதுதான் நீதிமன்ற துணைப் பதிவாளர்கள் மாயங் சர்மா, தபான் குமார் சக்ரவர்த்தி ஆகிய இருவர் திருத்தம் செய்துள்ளனர். அதாவது not என்ற ஒரு வார்த்தையை உத்தரவுக்குள் தாங்களாகவே புகுத்தியுள்ளனர்.
நீதிமன்ற விதிமுறைகளுக்கு மாறாக இந்தத் திருத்தம் செய்யப்பட்டதை கண்டுபிடித்த நீதிபதி நாரிமன் இதனை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன்கோகாய் கவனத்திற்கு கொண்டு செல்ல துணைப்பதிவாளர்கள்இருவரும் அதிரடியாக டிஸ்மிஸ் செய்யப்பட்டனர்.