மதுரையில் இன்று அதிகாலை போலீஸ் ஏட்டு ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள சாப்டூர் பகுதியைச் சேர்ந்தவர் ராமர். 29 வயதாகும் இவர் மதுரையில் போலீஸ் கான்ஸ்டபிளாக வேலைபார்த்து வந்தார். இவருக்கு ஆனந்தம் என்ற மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் இருக்கிறது. தனது குடும்பத்துடன் மதுரை ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பில் வசித்துவந்தார் ராமர் சமீபத்தில் தான் போலீஸ் ஏட்டாகப் பணி உயர்வு பெற்று அதற்கான பயிற்சியும் எடுத்து வந்தார். இந்தநிலையில் இன்று அதிகாலை ஆயுதப்படை குடியிருப்பில் உள்ள தனது வீட்டில் அனைவரும் தூங்கிய பிறகு மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக போலிஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு ராமரின் உடல் மீட்கப்பட்டது. தற்கொலை குறித்து தல்லாகுளம் போலீஸார், இது குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் ராமர் குறித்து அவரது உறவினர்கள் சில தகவல்களை கூறினர். அதில், ``ராமருக்கு அதிகமாக பணிச்சுமை இருந்து வந்தது. இதனால் ராமருக்கும் அவரது மனைவிக்கும் அடிக்கடி சண்டை நிகழும். இதனால் மனமுடைந்தது இதுமாதிரி, பலமுறை தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ளார். சமீபத்திலும் அதுபோல் கணவன் மனைவி இருவருக்கும் சண்டை நடந்தது. இதனால் கூட அவர் தற்கொலை செய்திருக்கலாம்" என அதிர்ச்சியாக கூறினர்.
இவர்களின் தகவல்களை அடிப்படையாக கொண்டு தற்போது ராமரின் தற்கொலைக்கு பணிச்சுமை தான் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கின்றதா எனப் பல்வேறு கோணங்களில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சில தினங்களுக்கு முன்தான் தேனி அருகே சதீஷ் என்னும் போலீஸ்காரர் காதல் தோல்வியால் தற்கொலை செய்துகொண்டார். இப்படி தொடரும் போலீஸ் தற்கொலைகளால் காவலர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க வேண்டும் என்ற கருத்து மேலோங்கியுள்ளது.