பாகிஸ்தானுடன் 1971-ல் நடந்த போருக்குப் பின் எல்லை தாண்டி அந்நாட்டுக்குள் இந்தியா முதல் தடவையாக தற்போது தாக்குதலைத் தொடுத்துள்ளது. இதனால் பாகிஸ்தான் பதறிப் போயுள்ளது.
புல்வாமா தீவிரவாத தாக்குதல் சம்பவம் இந்தியாவை கோபம் கொள்ளச் செய்துள்ளது. 40 சக வீரர்களை பறிகொடுத்த ஆத்திரத்தில் இருந்த இந்தியப் படை வீரர்களுக்கு மத்திய அரசும் ஊக்கம் கொடுக்க, பாகிஸ்தானுக்குள் ஊடுருவி கெத்து காட்டி திரும்பியுள்ளனர் இந்திய விமானப் படை வீரர்கள் .
அதிகாலை 3.30 மணிக்கு 12 ஜெட் போர் விமானங்களில் பாகிஸ்தானின் பாலகோட்,முசாபராபாத், சக்கோட்டி ஆகிய பகுதிகளில் 1000 கிலோ வெடிகுண்டுகளை வீசி தீவிரவாத முகாம்களை சிதைத்து விட்டு வெற்றிகரமாக திரும்பியுள்ளனர்.
1971-ல் பாகிஸ்தானுடனான போரில் இந்தியா வெற்றி கண்டது. மேலும் பாகிஸ்தானை துண்டாடி வங்கதேசம் என்ற ஒரு நாடு உருவாகவும் இந்தியாவே காரணம். அதன் பின் பாகிஸ்தான் எல்லைக்குள் இந்தியா நுழைவது இதுதான் முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.
1999-ல் நடந்த கார்கில் போர் கூட இந்திய எல்லைக்குள் இருந்தே தாக்குதல் நடத்தி ஊடுருவிய தீவிரவாதிகளை கொன்று குவித்து இந்திய ராணுவம் வெற்றியை ஈட்டியது.
அதே போன்று 2016 செப்டம்பரில் யூரி பகுதியில் இந்தியப் படை துல்லிய தாக்குதல் தொடுத்ததும் இந்திய எல்லையில் இருந்தபடி தான் நடத்தப்பட்டது.
இன்று பாகிஸ்தான் எல்லைக்குள் இந்தியா தொடுத்த தாக்குதலால் அந்நாடு பதறிப் போயுள்ளது. இந்தியா எல்லைக் கோட்டைத் தாண்டி தாக்குதல் நடத்தி சர்வதேச ஒப்பந்தத்தை மீறி விட்டது என்று குற்றம் சாட்டி பாகிஸ்தான் அலறுகிறது.