குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு

by Isaivaani, Jan 25, 2018, 09:01 AM IST

புதுடெல்லி: குடியரசு தினத்தை முன்னிட்டு தலைநகர் டெல்லியில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்திய குடியரசு தினம் நாளை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, டெல்லியில் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தேசியக்கொடியை ஏற்றி வைக்கிறார். பின்னர், முப்படை வீரர்களின் அணிவகுப்பு, மாநிலங்கள் சார்பில் பங்கேற்கும் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் ராஜபாதையில் நடைபெறுகின்றன.

இந்த ஆண்டு குடியரசு தின விழாவில் தென்கிழக்கு ஆசியாவை சேர்ந்த 10 நாடுகளின் தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கிறார்கள். இதற்காக, இந்தோனேஷிய அதிபர் ஜோகோ விடோடா, மியான்மர் தலைவர் ஆங்சான் சூகி, சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

பயங்கரவாதிகள் இவ்விழாவை சீர்குலைக்க தற்கொலைப்படை தாக்குதல் நடத்தக்கூடும் என உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளதை அடுத்து, டெல்லியில் வரலாறு காணாத பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதேபோல், டெல்லி பிராந்தியத்திலும் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை உளவுத்துறை நிறுவனங்களும், டெல்லி மாநில போலீசாரும் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக ஆளில்லா விமானங்கள், பாராகிளைடர்கள் மற்றும் வாகனங்கள் மூலம் நடத்தப்படும் எந்தவித அச்சுறுத்தலையும் சமாளிக்கும் வகையில் பாதுகாப்பு படையினர் தயாராக வைக்கப்பட்டு உள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

You'r reading குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை