மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா கடன் சுமையில் சிக்கி தவிக்கிறது. ஏர் இந்தியாவின் கடன் பொறுப்புகளைக் கையாள்வது மிகப் பெரிய சவாலான விஷயமாகி இருப்பதால் அவற்றால் தனியார் மயமாக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஏர் இந்தியா விமான ஊழியர்களுக்கு புதிய உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, இனி ஏர் இந்தியா விமான ஊழியர், பணிப்பெண்கள் ஒவ்வொரு அறிவிப்பின்போதும் ``ஜெய்ஹிந்த்'' என கூற வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த உத்தரவு தொடர்பாக விமானிகள் குழு, விமான ஊழியர்கள் குழுவுக்கு ஏர் இந்தியா சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. ஒவ்வொரு விமானத்தில் ஒவ்வொரு முறையும் ஏதாவது அறிவிப்புகளை வெளியிட்டு முடிக்கும் போது தேசத்தை போற்றும் வகையில் ஜெய்ஹிந்த் கூற வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
தேசபக்தியை அதிகரிக்கும் நடவடிக்கையாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ள நிலையில் இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, தியேட்டர்களில் தேசிய கீதம் இசைக்கும்போது எழுந்து நிற்க வேண்டும் என்ற உத்தரவு இன்று வரை பொதுமக்கள் மத்தியில் சலசலப்பை உருவாக்கியுள்ள நிலையில் இந்த புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.