உலக மகளிர் தினத்தை முன்னிட்டு விமான நிறுவனங்கள், முழுவதும் பெண்களால் மட்டுமே விமான சேவைகளை இன்று இயக்கி வருகின்றன. பெண் பயணிகளுக்கு பரிசுகள், சலுகைகளையும் அவை அறிவித்துள்ளன.
ஆண்டுதோறும் மார்ச் 8ஆம் தேதி, உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் பெண்களை சிறப்பிக்கும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. விமான நிறுவனங்களும் தங்கள் பங்கிற்கு பெண் விமானிகள், ஊழியர்களை மட்டுமே வைத்து, விமான சேவைகளை இன்று இயக்கி வருகின்றன.
ஏர் இந்தியா நிறுவனம் தனது 12 சர்வதேச சேவைகள் மற்றும் 40 உள்நாட்டு சேவைகளை பெண்களை வைத்து இயக்கி வருகிறது. டெல்லியில் இருந்து நியூயார்க், லண்டன், ரோம், பாரீஸ், சிட்னி, ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களுக்கும் மும்பையில் இருந்து லண்டன், நியூயார்க் நகரங்களுக்கும் இந்த விமானங்கள் இயக்கப்படுகின்றன.
ஏர் இந்தியாவின் துணை நிறுவனமான அலையன்ஸ் ஏர், டெல்லியில் இருந்து தர்மசலாவிற்கு பெண் விமானிகளை கொண்ட சேவையை இயக்குகிறது. ஸ்பைஸ் ஜெட் நிறுவனம், தனது 22 உள்நாட்டு சேவைகளை , பெண் விமானிகள், ஊழியர்களை கொண்டு இயக்குகிறது.
இன்னும் சில நிறுவனங்கள் விமானத்தில் பயணிக்கும் பெண்களுக்கு பூங்கொத்துகள், இனிப்பு வழங்குகின்றன. தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் பயணிகளுக்கு பரிசு பொருட்களை வழங்க, சில நிறுவனங்கள் முன்வந்துள்ளன. சிற்றுண்டி உணவு வகைகள், முன்னுரிமை சலுகைகள் என்று, மகளிர் தினத்தில் பெண்களுக்கு இன்னும் பல ஆச்சரியப் பரிசுகளும் காத்திருக்கின்றன.