ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில், பாதுகாப்பு படையினருடன் நடந்த கடும் துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், இந்திய நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவத்தினரும், பயங்கரவாதிகளும் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதை தடுக்க, இந்திய தரப்பில் தேடுதல் வேட்டை மேற்கொள்ளப்படுகிறது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் உள்ள டிரால் பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில் பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, பாதுகாப்பு படையினர் அங்கு தீவிர தேடுதல் பணியை தொடங்கினர்.
அப்போது, வீடு ஒன்றில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினரை குறிவைத்து, துப்பாக்கிச்சூடு நடத்தினர். பாதுகாப்பு படையினரும் இதற்கு பதிலடி கொடுக்க தொடங்கினர். இரு தரப்பினருக்கும் இடையே நீடித்த கடும் துப்பாக்கிச் சண்டையில் பயங்கவராதிகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அதேபோல், பாரமுல்லா மாவட்டம் உரி செக்டார் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் பொதுமக்களில் 4 பேர் காயமடைந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.