பாகிஸ்தான் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி , இம்ரான்கானுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார்.
புல்மாவா தாக்குதல் அடுத்து, பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் போர் ஏற்படும் அபாயம் உருவானது. விமானப்படை விமானி அபிநந்தன் பாகிஸ்தானிடம் சிக்கினார். அபிநந்தன் மீது கை வைத்தால், பாகிஸ்தான் மீது கடும் தாக்குதல் நடத்தப்படும் என்று இந்தியா தரப்பில் இருந்து பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதோடு, பிப்ரவரி 27- ந் தேதி ராஜஸ்தானில் 12 தரையில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகளை இந்தியா நிறுத்தியது. பாகிஸ்தானும் தன் தரப்பில் ஏவுகணை தாக்குதலுக்கு தயாரகவே இருந்தது. இதைத் தொடர்ந்தே உலக நாடுகள் சமாதானத்தில் ஈடுபட்டன. முக்கியமாக அமீரகம் இருநாடுகளுக்கிடையே அமைதி ஏற்பட கடுமையாக போராடியது. முடிவாக விமானி அபிநந்தனும் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் . நேற்று வெள்ளிக்கிழமை பாகிஸ்தான் தினம் கொண்டாடப்பட்டது. வழக்கமாக இஸ்லாமாபாத்தில் நடைபெறும் கொண்டாட்டங்களில் பங்கேற்க இந்தியா சார்பில் பிரதிநிதிகள் அனுப்பப்படுவார்கள். இந்த முறை காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர்களுக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்திருந்தது. இதனால், இந்திய பிரநிதிகள் பாகிஸ்தான் தின நிகழ்வுகளை புறக்கணித்தது. எனினும், இந்திய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி அனுப்பியுள்ள செய்தியில், 'துணைக்கண்டத்து மக்கள் சமாதானத்துடன் இணைந்து முன்னேற்றப் பாதையை காண வேண்டும். தீவிரவாதம் இல்லாத நிலை உருவாக வேண்டும்' என்று தன் வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளதாக பாகிஸ்தான் கூறியுள்ளது.
பிரதமர் மோடி அனுப்பிய வாழ்த்துச்செய்தியை தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள இம்ரான் கான், மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.