12-வது ஐபிஎல் இன்று தொடக்கம் : முதல் போட்டியில் தோனி - கோஹ்லி படை மோதல்

12-வது ஐபிஎல் சீசன் தொடக்கம், டி20 கிரிக்கெட் போட்டிகள் சென்னையில் இன்று தொடங்குகின்றன. முதலாவது ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கோஹ்லி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

ஐபிஎல் டி20 தொடரின் 12வது சீசன், சென்னையில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் ஒவ்வொரு அணியும் தலா இரண்டு முறை லீக் ஆட்டங்களில் மோதுகின்றன. மே 5ம் தேதி வரை 56 லீக் ஆட்டங்கள் நடைபெறுகிறது.லீக் ஆட்டங்களில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் பிளேஆஃப் சுற்றில் மோதுகின்றன.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் முதலாவது போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸை எதிர்த்து பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் விளையாடுகிறது. தோனி தலைமையிலான சென்னை அணியில் வாட்சன், ரெய்னா, பிராவோ, அம்பதி ராயுடு என அதிரடி வீரர்கள் உள்ளனர். கேதார் ஜாதவ், ஹர்பஜன் சிங், ஜடேஜா ஆகியோரின் பந்துவீச்சும் எதிரணிக்கு சவாலாக இருக்கும்.

சென்னை பெங்களூரு அணிகள் மோதல், கோலி தலைமையிலான பெங்களூரு அணியில் டிவில்லியர்ஸ், ஸ்டெய்னிஸ், ஹெட்மயர் போன்ற வீரர்களும், வாஷிங்டன் சுந்தர், உமேஷ் யாதவ் உள்ளிட்ட பந்துவீச்சாளர்களும் உள்ளனர். ஐபிஎல் போட்டிகளில் இரு அணிகளும் இதுவரை 22 போட்டிகளில் ஆடியுள்ளன. இதில் சென்னை 14-ல் வெற்றி பெற்றுள்ளது. பெங்களூரு அணி 7 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி முடிவு எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய போட்டியில் சென்னை அணியின் சுரேஷ் ரெய்னா 15 ரன்கள் எடுத்தால் ஐபிஎல் போட்டிகளில் 5000 ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற சாதனை படைப்பார். இதே சாதனையை எட்ட பெங்களூரு கேப்டன் கோஹ்லிக்கு 52 ரன்கள் தேவை என்ற நிலையில் இந்த சாதனையை முதலில் படைக்கப் போவது யார்? என்ற போட்டி இருவருக்குமிடையே ஏற்பட்டுள்ளது.

Get our website tamil news update in your mail inbox: Subscribe to The Subeditor - Tamil news website | RSS by Email

மேலும் செய்திகள்