6 வயது சிறுவனின் இளகிய குணத்தைக் கண்டு பலரும் பாராட்டி வருகின்றனர்.
‘டிரெக் சி லால்சன்ஹிமா’ என்ற 6 வயது சிறுவன் இன்று சமூக ஊடகங்களை ஆக்கிரமித்து விட்டார். மிசோரம் மாநிலம், சைராங் பகுதியைச் சேர்ந்த டிரெக், சைக்கிள் ஓட்ட பயிற்சி மேற் கொண்டபோது, அவ்வழியே சென்று கொண்டிருந்த ஒரு கோழிக் குஞ்சின் மீது எதிர்பாராமல் சைக்கிளை ஏற்றிவிட்டார்.
இதனால், செய்வதறியாமல் தவித்த அச்சிறுவன் அடிபட்ட கோழிக் குஞ்சை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல முடிவு செய்துள்ளான். ஆனால், அக்கோழிக் குஞ்சு இறந்துவிட்டது. இது தெரியாமல், டிரெக் கோழிக் குஞ்சை எடுத்துக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்துள்ளார். மருத்துவமனையில் பார்ப்பதற்குப் பணம் வேண்டும் என்பதால், தான் சேமித்து வைத்திருந்த 10 ரூபாயை எடுத்துச் சென்றுள்ளான்.
பின், வீட்டுக்குத் திரும்பி, தந்தையிடம் நடந்ததைக் கூறி, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு கேட்டுள்ளார். தந்தை வர மறுக்கவே, 100 ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு கோழிக் குஞ்சுடன் மருத்துவமனைக்குச் சென்றுள்ளான். சிறுவனின் இளகிய மனதை கண்டு அங்கிருந்தவர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர். ஒரு கையில் கோழிக்குஞ்சையும் மற்றொரு கையில், 10 ரூபாயுடனும் அப்பாவித்தனமாகச் சிறுவன் நிற்கும் புகைப்படத்தை அங்கிருந்த செவிலியர்கள் எடுத்துள்ளனர்.
தற்போது, அந்த புகைப்படம்தான் சமூக வலைத்தளங்களில் வைரல் ஹிட். ஃபேஸ்புக்-கில் வெளியான உடனே 1 லட்சம் ஷேர், கமெண்ட்ஸ் என நெட்டிசங்கள் தெறிக்க விடுகின்றனர்.