கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை தொடர்பு படுத்தி பேசக் கூடாது என்றும், தொடர்ந்து பேசினால், அவதூறு வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவோம் என்று சென்னை உயர் நீதிமன்றம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கோடநாடு, கொலை, கொள்ளைச் சம்பவத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொடர்புள்ளதாக திமுக தலைவர் முக ஸ்டாலின் குற்றம் சுமத்தினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசுத் தரப்பில் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடரப் பட்டிருந்தது. இந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை உத்தரவு பெற்றிருந்தார் மு.க.ஸ்டாலின்
இந்நிலையில் தற்போது தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் கோடநாடு கொலை, கொள்ளையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை தொடர்புபடுத்தி திமுக தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து பேசி வருகிறார். இதனால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தம்மை தொடர்புபடுத்தி பேச மு.க.ஸ்டாலினுக்கு தடை விதிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி முறையீடு செய்திருந்தார்.
இதனை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் எடப்பாடி பழனிச்சாமியை தொடர்புபடுத்தி பேசி வருவதற்கு அதிருப்தி தெரிவித்ததுடன், இனிமேல் பேசக்கூடாது என்று மு.க.ஸ்டாலினுக்கு எச்சரிக்கை விடுத்தனர். மேலும் எடப்பாடி குறித்து மு.க.ஸ்டாலின் பேசிய வீடியோக்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
மேலும் இந்தப் பிரச்னையில் இனியும் எடப்பாடியை தொடர்புபடுத்தி தொடர்ந்து பேசினால் கொட நாடு வழக்கில் ஸ்டாலினுக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணைக்கான தடை நீக்கப்படும் என்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளது.