மேற்கு வங்கத்தின் வளர்ச்சிக்கு மம்தா பானர்ஜி முட்டுக்கட்டையாக உள்ளார் என பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தில் கூறியதற்கு, பதிலடி கொடுக்கும் விதமாக, “நான் என்ன மோடியைப் போல் காலாவதி பிரதமரா, பொய் வாக்குறுதிகளை கொடுக்க” என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கலாய்த்துத் தள்ளியுள்ளார்.
வரும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, நாடு முழுவதும் தேர்தல் அலை வீசி வருகிறது. பிரதமர் மோடி மற்றும் பாஜக அரசை எதிர்த்து கடுமையாக விமர்சித்து வருகிறார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.
இந்நிலையில், மேற்கு வங்காளத்தின் கூச்பெஹார் மாநிலத்தில் உள்ள டின்ஹட்டாவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில், மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பேனர்ஜி மக்களிடையே பேசினார். அப்போது, மோடியின் பாஜக ஆட்சியில் 12 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர் என்றும் தனது ஆட்சியில், விவசாயிகளின் வாழ்வாதாரம் முன்னேறி உள்ளதாகவும் கூறினார்.
பின்னர், மோடி பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறார் என்றும், மக்கள் அதற்கு ஏமாற மாட்டார்கள் என்றும் கூறிய மம்தா, மோடி ஒரு காலாவதியான பிரதமர் என கலாய்த்துத் தள்ளினார். மேலும், மோடி என்னுடன் நேருக்கு நேர் விவாதம் நடத்தத் தயாரா? என்றும் சவால் விடுத்தார்.