வருமான வரித்துறையின் அதிரடி சோதனையை முன்வைத்து, வேலூர் மக்களிடம் அனுதாப ஓட்டுகளை அள்ள முழுவீச்சில் இறங்க திமுகவினர் திட்டமிட்டுள்ளது.
வேலூர் மக்களவை தொகுதியில், திமுக சார்பில் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார். அவரை, எதிர்த்து அதிமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர் ஏ.சி சண்முகம், அமமுக வேட்பாளர் கே.பாண்டுரங்கள் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். தேர்தல் தேதி நெருங்கிவிட்டதால், தீவிர பிரசாரத்தில் வேட்பாளர்கள் ஈடுபட்டிருக்கின்றனர். இந்நிலையில், நான்கு நாட்களுக்கு முன்பு, திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் இரவில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் இறங்கினர். இதைத் தொடர்ந்து, துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த்துக்கு சொந்தமான கல்லூரி போன்ற இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
முன்னதாக, தேர்தலில் தனது மகனை வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்ற முனைப்பில் வேலூரில் முகாமிட்டிருந்தார் துரைமுருகன். வருமான வரித்துறையினரின் இந்த அதிரடியால், தொகுதி பிரசாரத்தில் தலைகாட்டாமல் வீட்டிற்குள் முடங்கும் நிலை ஏற்பட்டது. இதனால், வேலூரில் திமுகவின் பிரசாரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. அடிமட்ட தொண்டர்களே கதிர் ஆனந்த்திற்காகப் பிரசாரம் செய்தனர். இது திமுகவுக்குப் பின்னடைவாகவும் அமைந்தது.
இந்நிலையில், வேலூர் தொகுதிக்கு உட்பட்ட சில பகுதியில் தற்போது பிரசாரத்தை தொடங்கியுள்ளார் கதிர் ஆனந்த். இதனிடையில், வருமான வரித்துறை சோதனை நடத்தியதால் சில வழக்கு, விசாரணைகளை எதிர்கொள்ளும் நிலையில் துரைமுருகன் இருக்கிறார். அதனால், தனது வழக்கறிஞர்களிடம் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். ஆனதால், நாளைதான் துரைமுருகன் தனது பிரசாரத்தைத் தொடங்குவார் என திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், வருமான வரித்துறை நடத்திய சோதனையைப் பிரசாரத்தில் ஆயுதமாக மாற்ற ‘பக்கா ப்ளான்’ போடப்பட்டுள்ளதாக திமுக வட்டாரங்கள் கூறுகின்றனர். இதனால், மக்களின் அனுதாப ஓட்டுகளை எளிதில் அள்ளிவிடலாம் என்கின்றனர்.