நிலுவைத் தொகை பாக்கி காரணமாக, ஜெட் ஏர்வேஸ் விமானங்களுக்கு வழங்கும் எரிபொருளை முற்றிலுமாக நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் தெரிவித்துள்ளது. இதனால், ஜெட் ஏர்வேஸின் விமான சேவையில் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவின் புகழ்பெற்ற நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. கடந்த 1993ல் நான்கு விமானங்களுடன் தொடங்கப்பட்ட இந்நிறுவனம், 119 விமானங்களை சேவைக்குப் பயன்படுத்தி வந்தது.
விமான போக்குவரத்துத் துறையில், புதிய தனியார் நிறுவனங்களின் ஆதிக்கத்தால், அதனுடன் போட்டிப் போடமுடியாமல் அண்மைக்காலமாகத் தவித்து வருகிறது ஜெட் ஏர்வேஸ். 119 விமானங்களில் பெரும்பாலானவை வாடகை விமானங்கள் ஆகும். நிதிப் பற்றாக்குறையால், இந்த விமானங்களுக்கு அளிக்க வேண்டிய வாடகை பாக்கி அதிகரித்தது. அதனால், தன் விமான சேவையை படிப்படியாகக் குறைத்தது ஜெட் ஏர்வேஸ். தற்போதைய நிலவரப்படி, 26 விமானங்களை மட்டும் ஜெட் ஏர்வேஸ் வைத்திருக்கிறது.
நிதி பற்றாகுறை காரணமாக ஊழியர்களுக்கு சரிவர மாத சம்பளம் வழங்காமல் இழுத்தடித்தும் வருகிறது. இதனால், அந்நிறுவனத்தில் பணிபுரியும், பொறியாளர்கள், பணிப்பெண்கள், விமான ஓட்டிகள் என அனைவரும் சிரமத்தில் உள்ளனர்.
இந்நிலையில், ஜெட் ஏர்வேஸ் விமானங்களில் எரிபொருள் விநியோகத்தை பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் நிறுத்துவதாக அறிவித்துள்ளது. நிலுவைத் தொகை பாக்கியை ஜெட் ஏர்வேஸ் செலுத்தாததால், அந்நிறுவனத்து அனுப்பும் பெட்ரோல் விநியோகத்தை இன்று 12 மணியில் இருந்து நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் தெரிவித்துள்ளது.
முன்னதாக, எஸ்பிஐ வங்கியிடம் கடந்த 25ம் தேதி ஜெட் ஏர்வேஸ் ஒரு கடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. அதன்படி, ரூ.1,500 கோடி ஜெட் ஏர்வேஸ்க்கு வழங்கப்படும்.