ஊதியம் கொடுக்காத விரக்தியில் ஜெட் ஏர்வேஸ் விமானிகள் ஒட்டு மொத்தமாக விடுப்பு எடுத்ததால் ஒரே நாளில் 14 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், நடப்பு நிதியாண்டின் 2வது காலாண்டில் 1,297 கோடி ரூபாய் நஷ்டம் அடைந்துள்ளதாக தெரிவித்தது. தொடர்ந்து 3வது காலாண்டாக அந்த நிறுவனத்திற்கு 1,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
ஆகவே, அக்டோபர், நவம்பர் உள்ளிட்ட மாதங்களுக்கான ஊதியம் விமானிகள், பொறியியலாளர்களுக்கு வழங்கப்படவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த விமான ஓட்டிகள் உடல்நிலையை காரணம் காட்டி கூட்டாக விடுப்பு எடுத்தனர்.
இதனால் நேற்று ஒரே நாளில் நாட்டின் பல பகுதிகளுக்கு செல்ல வேண்டிய 14 விமான சேவைகள் ரத்தானது.
டிக்கெட் முன்பதிவு செய்திருந்த நூற்றுக்கணக்கான பயணிகள் கடும் பாதிப்புக்கும் மன உளைச்சலுக்கும் உள்ளாகினர். ஊதியம் பெறாமல் வேலை செய்ய முடியாது என்று சில விமானிகள், ஜெட் ஏர்வேஸ் நிர்வாகத்துககு கடிதம் எழுதி இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.