மக்கள் நலக் கூட்டணியின் சார்பில் பல்லாவரம் தொகுதியில் போட்டியிட்ட தமிழர் முன்னேற்றப் படையின் வீரலட்சுமி, தற்போது எடப்பாடி பழனிசாமி முகாமில் ஐக்கியமாகியிருக்கிறார். அரசியல் அறிக்கைகள் வெளியிட்ட நேரம் போக, மற்ற நேரங்களில் சுற்றுச்சூழல் பிரச்னைகளில் அக்கறை காட்டி வருவதாகச் சொல்கின்றனர் அந்தக் கட்சியின் தொண்டர்கள்.
தமிழர் முன்னேற்றப்படைத் தலைவி வீரலட்சுமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரக்கோணம் தாலுகாவில் 2-12-2018, நேற்று இரவு 9.00 மணியவில் விவசாய நிலங்களில் மணல் பெரிய பெரிய வண்டிகளில் கடத்தப்படுவதாக அந்த தாலுகாவில் இருந்து எமக்கு விவசாய பெருமக்கள் தகவல் தெரிவித்தார்கள்.
அதன் அடிப்படையில் நான் வாட்ஸ் அப்பில் உரிய அதிகாரிகளுக்கும் ஊடகங்களுக்கும் தகவல் கொடுத்தேன். இந்தத் தகவலைக் கேட்டறிந்த காஞ்சிபுரம் காவல்துறை நிர்வாகமும் குறிப்பாக திருப்பெருமந்தூர் காவல் துணை கண்காணிப்பாளர், திறம்பட செயலாற்றி மணல் கடத்தல் லாரிகளையும் பல லட்சம் மதிப்புள்ள மணல்களை பறிமுதல் செய்து சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்தில் வைத்துள்ளார்.
இது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக காவல் துணை கண்காணிப்பாளர் சரகத்திற்கு உள்பட்ட அனைத்து காவல் துறை நிர்வாகத்துக்கும் தமிழ் மண் வளமோடு வாழ்வது போல அவர்களின் குடும்பங்களும் நூறு ஆண்டு வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன்' எனக் கூறியிருக்கிறார்.
இதைப் பற்றிப் பேசும் தமிழர் முன்னேற்றப்படையின் பொறுப்பாளர்கள், ' சட்டமன்றத் தேர்தலில் வைகோவின் ஆசியோடு பல்லாவரம் தொகுதியில் போட்டியிட்டார் வீரலட்சுமி. தொகுதிக்குள் பலமுறை வலம் வந்து வாக்கு கேட்டும் மக்கள் எங்களை அங்கீகரிக்கவில்லை.
நோட்டாவுக்குத்தான் ஓட்டு போட்டார்கள். அதிமுக, திமுக வேட்பாளர்களின் அராஜகத்தால் வீழ்ந்தோம். இதன்பிறகு வைகோவோடு சண்டையிட்டுக் கூட்டணியை விட்டு வெளியே வந்துவிட்டார்.
இப்போது ஒரு தமிழர் என்ற அடிப்படையில் எடப்பாடியாரை ஆதரிக்கிறார் வீரலட்சுமி. அவர் தலைமையில் தமிழர்களுக்கு விடியல் கிடைத்து வருவதாக நம்புகிறார். எடப்பாடியாரும், தமிழர் அமைப்புகள் தன்னை ஆதரிப்பதை விரும்புகிறார். அதனால்தான் மணல் கொள்ளை குறித்து அக்கா கொடுத்த புகார் மீது போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். நாடாளுமன்றத் தேர்தலில் எடப்பாடியார் வாய்ப்பு கொடுத்தால் வீரலட்சுமி போட்டியிடுவார்' என்கின்றனர் உற்சாகமாக.