இந்தியாவின் அடுத்த பிரதமர் யார்? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து விட்டது. ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கும் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. அதற்கு முன்னதாக, சர்வீஸ் வாக்காளர்கள் தங்கள் தபால் வாக்குகளை இன்று பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், நேஷனல் டிரஸ்ட் நடத்திய மாபெரும் கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியிட்டுள்ளது. கடந்த மாதம் 2-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நாடுமுழுவதும் நடத்திய இந்த கருத்து கணிப்பில், பிரதமர் நரேந்திர மோடிக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரித்து இருப்பது தெரியவந்துள்ளது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை மோடியுடன் ஒப்பிடுகையில், மோடி வலிமையான தலைவராக இருக்கிறார் எனவும் ஆளுமை ஆற்றல் உள்ளவர் எனவும் மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மோடி மீண்டும் பிரதமராக 63 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். முன்னதாக, கடந்த பிப்ரவரி மாதம் நேஷனல் டிரஸ்ட் நடத்திய கருத்துக் கணிப்பில் மோடிக்கு 52.6 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்து இருந்தனர்.
பாகிஸ்தான் மீது இந்திய நடத்திய அதிரடி தாக்குதலுக்குப் பிறகு மக்கள் மத்தியில் மோடிக்கு செல்வாக்கு அதிகரித்து இருப்பதாக கருத்துக் கணிப்பு முடிவில் கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில், ஆந்திரா, தெலுங்கானா, தமிழகம், ஒடிசா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில், மாநில கட்சித் தலைவர்களுக்குச் செல்வாக்கு இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.