கர்நாடகாவில் கோலார் மருத்துவமனையில் 90 குழந்தைகள் இறந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
ஜூன் 1ம் தேதியில் இருந்து ஆகஸ்ட் 22ம் தேதி வரை இங்குள்ள ஸ்ரீ நரசிம்ம ராஜா மருத்துவமனையில் 35 குழந்தைகள் இறந்துள்ளன. ஜனவரி மாதத்தில் இருந்து இப்போது வரை 90 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. பிறவி குறைபாடு மற்றும் குழந்தைகள் எடைகுறைவு காரணமாக இறந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. கர்நாடக மாநிலத்தில், ஸ்ரீ நரசிம்ம ராஜா அரசு மருத்துவமனையில் கடந்த வாரத்தில் 3 குழந்தைகள் இறந்தது தொடர்பாக சுகாதாரத்துறை இயக்குனர் அரசுக்கு அளித்துள்ள அறிக்கையில், இந்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்த மருத்துவமனையில் கடந்த ஜனவரி முதல் 1,053 குழந்தைகள் அனுமதிக்கப்பட்ட நிலையில் அதில் 90 குழந்தைகள் இறந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக விரிவான அறிக்கை அளிக்க சுகாதாரத் துறைக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக உண்மை நிலையை கண்டறிய பாஜகவின் மூத்த தலைவர் சுரேஷ் குமார் தலைமையில் 12 பேர் கொண்ட குழுவை கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா நியமித்துள்ளார்.