தெலங்கானாவில் முதற்கட்ட மக்களவைத் தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், அங்கு 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வேலைப் பார்த்துக் கொண்டிருந்த 10 தொழிலாளர்கள் இன்று மதியம் திடீரென ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி பரிதாபமாக பலியாகினர்.
கிராமபுற மக்களுக்கான 100 நாள் வேலை திட்டம் நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் இயங்கி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் தெலங்கானாவில் உள்ள நாராயணபேட்டையில் ஏரிகள், குளங்கள் தூர் வாருதல் உள்ளிட்ட பணிகளில் மக்கள் ஈடுபட்டு வருவது வழக்கம்.
இந்நிலையில், இன்று மதியம் மக்கள் வேலை செய்து கொண்டிருந்த பகுதியில் திடீரென ஏற்பட்ட பெரிய அளவிலான மண் சரிவில் சிக்கி, பெண்கள் உட்பட 10 தொழிலாளர்கள் பரிதாபமாக பலியாகிய சம்பவம் தெலங்கானா மாநிலத்தையே உலுக்கியுள்ளது.
மண் சரிவில் சிக்கிய மேலும் சில மக்களை மீட்ட காவல்துறையினர், அவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
இந்த செய்தி அறிந்த தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், ”இந்த சம்பவம் தம் மனதை உலுக்கி விட்டதாகவும், இதில் உயிரிழந்தவர்கள் மற்றும் படுகாயமடைந்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்”
மேலும், மண் சரிவு ஏற்பட்டதற்கு என்ன காரணம் எனவும் விசாரிக்க உத்தரவிட்டுள்ளார்.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும் மக்களவைத் தேர்தல் நாளை முதல் தொடங்குகிறது. ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் நாளை முதற்கட்ட தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அங்கு நடைபெற்ற இந்த விபத்து நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.