வாக்குப்பதிவு குறைந்தற்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் காரணமா?
ஆந்திராவில் நேற்று நடந்த மக்களவை தேர்தலின் போது மின்னணு இயந்திரங்களில் ஏற்பட்ட கோளாறால் இரவிலும் வாக்குப்பதிவு நடந்தது. இருப்பினும், கடந்த மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளை காட்டிலும் இந்த முறை குறைவாகவே பதிவானது.
மத்தியில் புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்கான மக்களவை தேர்தல் நேற்று தொடங்கியது. மக்களவை தோ்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த முதல் கட்ட தேர்தலில் 20 மாநிலங்களில் உள்ள 91 மக்களவை தொகுதிகளுக்கு நடைபெற்றது.
ஆந்திராவில் மொத்தம் உள்ள 25 மக்களவை தொகுதிகளுக்கும் நேற்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.
ஆந்திராவில் நேற்று மக்கள் அதிக ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர். இருப்பினும், பல வாக்குசாவடிகளில் இருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. தொழில்நுட்ப நிபுணர்கள் உடனடியாக சரி செய்தனர். இருப்பினும் சில இடங்களில் 3 மணி நேரம் வரை வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.
வாக்குப்பதிவு சில மணி நேரம் நிறுத்தப்பட்டதால் வாக்காளர்கள் எரிச்சல் அடைந்தனர். மேலும் வாக்குப்பதிவு இயந்திர கோளாறு தகவல்களை அறிந்த வாக்காளர்கள் வாக்குசாவடிக்கு செல்ல விரும்பம் இல்லாமல் இருந்துள்ளனர். இதற்கிடையே ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறு தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதினார்.
இதனையடுத்து 400 மையங்களுக்கு தேர்தல் நேரத்தை அதிகரித்து வாக்குப்பதிவை நடத்தப்பட்டது. இதனால் ஆந்திர மக்கள் இரவில் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். இருப்பினும், நேற்று நடைபெற்ற ஆந்திர மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளை காட்டிலும் குறைவுதான். 2014 மக்களவை தேர்தலில் ஆந்திராவில் 76 சதவீதத்துக்கு மேல் வாக்குகள் பதிவானது.
ஆனால் 2019 மக்களவை தேர்தலில் 66 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவானது.
கடந்த மக்களை தேர்தலில் பதிவான வாக்குகளை காட்டிலும் தற்போது 10 சதவீதத்துக்கு மேல் வாக்குகள் குறைந்தற்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏற்பட்ட கோளாறுதான் காரணம் என பலர் கூறதொடங்கியுள்ளனர்.