‘‘இந்தியாவில் நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள் என்று பேசுங்கள்... எப்போதும் பாகிஸ்தானையை சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்...’’ என்று பா.ஜ.க.வை கடுமையாக விமர்சித்துள்ளார் பிரியங்கா காந்தி.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் பொறுப்பேற்ற பிரியங்கா காந்தி, தற்போது தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். கடந்த நாடாளுமன்றத் தேர்தல் வரை தனது தனது தாய் சோனியாவின் ரேபரேலி தொகுதியிலும், சகோதரர் ராகுலின் அமேதி தொகுதியிலும் மட்டும்தான் பிரியங்கா பிரச்சாரம் செய்தார். அப்போதும் பா.ஜ.க.வை கடுமையாக விமர்சித்ததில்லை. ஆனால், இப்போது பொதுச் செயலாளரான பிறகு அவர் உ.பி.யில் பல தொகுதிகளில் பிரச்சாரம் செய்கிறார். வெளிமாநிலங்களிலும் கூட பிரச்சாரம் செய்யத் தொடங்கியுள்ளார்.
அவர் பிரச்சாரத்தில் பிரதமர் மோடியையும், பா.ஜ.க.வையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். அசாமில் நேற்று அவர் பிரச்சாரம் செய்த போது, ‘‘பிரதமர் மோடி, அமெரிக்கா போகிறார். அங்குள்ளவர்களை கட்டித் தழுவுகிறார். சீனா போகிறார், கட்டித்தழுவுகிறார். ரஷ்யா போகிறார், கட்டித் தழுவுகிறார். பாகிஸ்தான் போகிறார், பிரியாணி சாப்பிடுகிறார். ஆனால், அவரது தொகுதியான வாரணாசியில் அவரால் ஐந்து நிமிடம் கூட மக்களுடன் இருக்க முடியவில்லை’’ என்று சாடினார்.
இன்று அவர் உ.பி. மாநிலம் பதேப்பூர் சிக்ரி தொகுதியில் ராஜ்பாப்பரை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், ‘‘நீங்கள்(பா.ஜ.க.) எப்போதும் பாகிஸ்தானைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறீர்கள். இந்தியாவில் நீங்கள் 5 ஆண்டுகளில் என்ன செய்திருக்கிறீர்கள்? அதைப் பற்றி பேசுங்கள். இதைப் பற்றி யாராவது கேள்வி கேட்டால், உடனே அவர்களின் வாயை அடைக்கப் பார்க்கிறீர்கள். யார் உங்களை கேள்வி கேட்டாலும் அவர்களை ‘ஆன்டி நேஷனல்’ என்று முத்திரை குத்துகிறீர்கள். எத்தனை நாளைக்கு இப்படி செய்யப் போகிறீர்கள்?’’ என்று ஆவேசமாகப் பேசினார் பிரியங்கா காந்தி.