ஜெட் ஏர்வேஸ் விமான சேவை தற்காலிகமாக மூடப்படுகிறது என்ற செய்தி வெளியாகியுள்ளது.
இந்தியாவின் புகழ்பெற்ற விமான சேவை நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் தற்போது கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. இதனால், விமான சேவையை தொடர முடியாமல் திணறி வருகிறது அந்நிறுவனம். இதன் விளைவாக, ஜெட் ஏர்வேஸின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவையை தற்காலிகமாக நிறுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அண்மையில், ஜெட் ஏர்வேஸ் விமானங்களுக்கு வழங்கப்பட்ட எரிபொருள் விநியோகத்தை நிறுத்துவதாக பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் அறிவித்தது. அதைத் தொடர்ந்து, ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்கள் சம்பள பாக்கியை உடனடியாக நிறுவனம் வழங்க வேண்டும் என டெல்லியில் போராட்டம் நடத்தினர்.
இப்படியான நிலையில், நிதி நெருக்கடியில் இருந்து ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை மீட்க, எஸ்பிஐ வங்கியிடம் கடந்த மாதம் கடன் ஒப்பந்தம் போட்டப்பட்டது. ஒப்பந்தம்படி ரூ.1,500 கோடி இன்னும் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படவில்லை. அது குறித்த பேச்சுவார்த்தை இன்னும் முழுமை அடையவில்லை எனக் கூறப்படுகிறது.
ஆகையால், நிதி நெருக்கடி நீடிப்பதால் தற்காலிகமாக விமான சேவையை நிறுத்தும் நிலையில் ஜெட் ஏர்வேஸ் உள்ளது.