நீதித்துறையை சீர்குலைக்க சதி தலைமை நீதிபதி குற்றச்சாட்டு!

Supreme Court denied Sexual Harassment allegations levelled against Chief Justice by a former woman employee

Apr 20, 2019, 12:15 PM IST

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் மீது அவரிடம் முன்பு பணியாற்றிய பெண் ஊழியர் பாலியல் குற்றச்சாட்டு கூறியுள்ளார். அந்த குற்றச்சாட்டில் எந்த முகாந்திரமும் இல்லை என்று மறுத்துள்ள தலைமை நீதிபதி, நீதித்துறையை சீர்குலைக்க சில சக்திகள் முயல்வதாக கண்டனம் தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் அலுவலகத்தில் கடந்த 2016ம் ஆண்டு அக்டோபர் முதல் பணியாற்றி வந்த பெண் உதவியாளர் ஒருவர் 2018ம் ஆண்டு அக்டோபர் 11ம் தேதி டிஸ்மிஸ் செய்யப்பட்டார். அவர் தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அனைவருக்கும் நேற்று ஒரு அபிடவிட் அனுப்பி வைத்துள்ளார். அதில், தன்னிடம் தலைமை நீதிபதி தவறாக நடந்து கொள்ள முயற்சித்ததாகவும், அவரை உதறித் தள்ளி விட்டு வந்ததாகவும் குற்றம்சாட்டியிருக்கிறார். மேலும், அந்த சம்பவத்திற்குப் பின், தன்னை டிஸ்மிஸ் செய்து விட்டனர் என்றும், காவல்துறையில் பணியாற்றி வரும் தனது கணவர், மைத்துனர் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாகவும் கூறியிருக்கிறார். மேலும், பல்வேறு வகையில் தனது குடும்பம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியிருக்கிறார்.


இதையடுத்து, உச்ச நீதிமன்றப் பதிவாளர் ஜெனரல், மீடியாக்களுக்கு ஒரு மறுப்பு அறிக்கையை இமெயிலில் அனுப்பி வைத்துள்ளார். அதில், ‘‘அந்த பெண் கூறியிருக்கும் குற்றச்சாட்டில் எந்த அடிப்படையுமே இல்லை. முகாந்திரமே இல்லாமல் வேண்டுமென்றே இந்த குற்றச்சாட்டு கூறப்பட்டிருக்கிறது’’ என்று அடியோடு மறுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், நீதிபதிகள் அருண்மிஸ்ரா, சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று அவசரமாக கூடி அந்த வழக்கை விசாரித்தது.


அப்போது தலைமை நீதிபதி கூறியதாவது:


அந்த பெண் ஊழியரின் குற்றச்சாட்டுகளில் அடிப்படை முகாந்திரம் எதுவுமே இல்லை. அவரது குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் அளவுக்கு தரம் தாழ்ந்து செல்லவும் நான் விரும்பவில்லை. அந்த ஊழியர் ஏற்கனவே 4 மாதங்கள் சிறையில் இருந்துள்ளார். அவரது முறைகேடான செயல்களுக்காக காவல் துறையினர் பல முறை எச்சரித்திருக்கிறது.
நான் அடுத்த வாரம் சில முக்கிய வழக்குகளை விசாரிக்கவிருக்கிறேன். இந்த சூழலில் என்னை குறிவைத்து சில சக்திகள் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளன. எனக்கு இன்னும் 7 மாதம் பதவிக்காலம் உள்ளது. நான் எந்த வழக்கையும் விசாரித்து நியாயமான தீர்ப்புகளை அளிப்பேன்.


நீதித்துறையை சீர்குலைக்க மிகப்பெரிய சக்திகள் சதி செய்கின்றன. அந்த சக்திகள் என்னை குறிவைத்திருக்கின்றன. இதை அனுமதிக்கக் கூடாது.
இவ்வாறு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் கூறினார்.


மற்ற இரு நீதிபதிகளும் கூறுகையில், ‘‘அபாண்டமான குற்றச்சாட்டுகளை வெளியிடாமல் மீடியாக்கள் கட்டுப்பாடுடன் செயல்பட வேண்டும்’’ என்று அறிவுறுத்தினர்.
இந்த விவகாரம் தற்போது நீதித்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அயோத்தி பிரச்சனை: உச்சநீதிமன்ற அமைத்த குழுவில் மூவரும் தமிழர்!

You'r reading நீதித்துறையை சீர்குலைக்க சதி தலைமை நீதிபதி குற்றச்சாட்டு! Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை