ரியல்மீ 3 ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட வடிவான ரியல்மீ 3 ப்ரோ, ஏப்ரல் மாதம் 22ம் தேதி திங்கள்கிழமையன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ரெட்மி நோட் 7 ப்ரோ போனுக்கு போட்டியாக இது விளங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முறைப்படியான அறிமுகத்திற்கு முன்னதாகவே ரியல்மீ 3 ப்ரோ, போனை பற்றிய சில விவரங்கள் வெளியாகியுள்ளன. 'ஸ்பீட்ஸ்டர்' என்ற சிறப்புப் பெயர் வழங்கப்படும் இந்த போனில் மேம்படுத்தப்பட்ட பல சிறப்பம்சங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது.
போட்டி சாதனமான ரெட்மி நோட் 7 ப்ரோ, 48 எம்பி ஆற்றல் கொண்ட இரட்டை காமிராக்கள் கொண்டது. குவல்காம் ஸ்நப்டிராகன் 675 பிராசஸர், 6.3 அங்குல டாட் நாட் தொடுதிரை, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5, டைப் - சி போர்ட். 4000 mAh ஆற்றல் கொண்ட மின்கலம், 6 ஜிபி RAM வரைக்குமான இயக்கவேகத்துடன் கிடைக்கிறது.
ரியல்மி 3 ப்ரோவில் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:
64 மெகாபிக்ஸல் தரம் கொண்ட புகைப்படங்களை எடுக்கக்கூடிய அல்ட்ரா ஹெச்டி மோட் என்ற வசதி ரியல்மி 3 ப்ரோவில் இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனாலும், பிக்ஸல் பின்னிங் போன்ற எவ்வகை தொழில்நுட்பத்துடன் இது சாத்தியமாக்கப்படும் என்று விளக்கப்படவில்லை.
உயர்தர ஸ்மார்ட்போன்களில் கிடைக்கும் மெதுவாக அசைவை பதியும் அல்ட்ரா ஸ்லோ மோஷன் வசதி, பட்ஜெட் மற்றும் நடுத்தர போன்களில் இல்லை. ரியல்மி நிறுவனத்தின் இந்த நடுத்தர வகை போனில் ஸ்லோ மோஷன் காமிரா வசதி இருக்கக்கூடும்.
10 நிமிடம் சார்ஜ் செய்தால் ஐந்து மணி நேரம் பேசக்கூடிய ஆற்றல் சேகரிக்கக்கூடியதாக ரியல்மி 3 ப்ரோ இருக்கும் என்று அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மாதவ் சேத் கூறியுள்ளார். ரியல்மி 3 மீடியாடெக் ஹீலியோ பி70 பிராசஸரை கொண்டிருந்தது. ரியல்மி 3 ப்ரோ, குவல்காம் போன்ற வேறு பிராசஸரோடு அறிமுகம் செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
ஃபோர்ட்நைட் என்ற பிரபலமான கிராபிக்ஸ் விளையாட்டு (கேம்) இதுவரை நடுத்தர போன்களில் வழங்கப்படவில்லை. ரியல்மி 3 ப்ரோவில் இவ்விளையாட்டு கிடைக்கலாம். ஸோமி நிறுவனம் தனது ரெட்மி நோட் 7 போன்களின் மேம்படுத்தலின்போது ஃபோர்ட்நைட் விளையாட்டை தரக்கூடும் என்ற எதிர்பார்ப்பும் பரவலாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.