ஆட்டோ கட்டணத்தை விட விமானக் கட்டணம் குறைந்துள்ளதாக விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.
இது குறித்து மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற்ற மேலாண்மை கழகத்தின் 27ஆவது மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா, “சிலர் இதை நான் முட்டாள்தனமாக பேசுவதாக கூறுவார்கள். ஆனால், அதுதான் உண்மை.
இந்தூரில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் பயணம் செய்வதற்கு ஒரு கிலோமீட்டருக்கு 5 ரூபாயே ஆகிறது. அதேநேரத்தில் ஆட்டோ-ரிக்ஷாவில் நகரத்திற்குள் பயணிக்கவே ஒரு கிலோமீட்டருக்கு எட்டு முதல் பத்து ரூபாய் வரை செலவழிக்கப்பட்டு வருகிறது” என்று கூறியுள்ளார்.
மேலும், இந்தியாவில் விமானத்தில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை நான்காண்டுகளுக்கு முன் ஆண்டுக்கு 11 கோடியாக இருந்ததாகவும், நடப்பாண்டில் அது 20 கோடியாக உயரும் என்றும் உலகின் மற்ற நாடுகளை விட இந்தியாவில் விமானக்கட்டணம் குறைவாக உள்ளது என்றும் கூறியுள்ளார்.