மும்பை ஐ.ஐ.டி.யில் உள்ள ஓர் உணவகத்தில் அசைவ உணவுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதற்குப் பெரும்பான்மையான மாணவர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
மும்பையில் பொவாய் என்னுமிடத்தில் உள்ள ஐஐடியில் கட்டுமானத்துறையின் ஓர் உணவு விடுதியில் மீன், இறைச்சி ஆகிய அசைவ உணவு வகைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. அது குறித்து உணவு விடுதி அறிவிப்பில், “அசைவ உணவுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இனிமேல் வழங்கப்பட மாட்டாது” என்று தெரிவித்துள்ளது.
இதற்கு விளக்கம் அளித்துள்ள விடுதி நிர்வாகம், “முட்டை உள்ளிட்ட அசைவ உணவுகள் வழங்க சில மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்” என்று கூறியுள்ளது.
ஆனால், நூற்றுக்குத் தொண்ணூறு மாணவர்கள் அசைவ உணவு உண்பவர்களாக இருக்கும்போது 10 விழுக்காட்டினரின் உணவுப் பழக்கத்தை மற்றவர்கள் மீது திணிப்பதாக ஐஐடி நிர்வாகம் மீது மாணவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
ஏற்கெனவே சைவ உணவு உண்பவர்களுக்கும் அசைவ உணவு உண்பவர்களுக்கும் தனித்தனித் தட்டுக்களைப் பயன்படுத்துமாறு விடுதி உணவகத்துக்கு ஐஐடி நிர்வாகம் அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது.