பிரதமர் மோடியின் கருத்தை விமர்சிக்கும் வகையில் பட்டம் பெறும் போது அணியும் ஆடையை அணிந்து கொண்டு கல்லூரி மாணவர்கள் பக்கோடா கடை திறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரதமர் மோடி பட்ஜெட்டிற்கு முன்னதாக தனியார் செய்தி சேனலுக்கு பேட்டியளித்து பேசுகையில், வேலைவாய்ப்பு குறித்து பக்கோடா விற்று தினமும் 200 ரூபாய் சம்பாதிக்கலாம் என்று கருத்து தெரித்தார். இதற்கு எதிர்க்கட்சிகள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து பெங்களூருவில் உள்ள பாரதீய ஜனதா அலுவலகம் முன் பக்கோடா கடை திறந்து இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். பிரதமர் மோடி ஞாயிறன்று பெங்களூருவில் பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துக் கொண்டார்.
பிரதமர் மோடியின் பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானத்திற்கு அருகே கல்லூரி மாணவர்கள் புதியதாக பக்கோடா கடை ஒன்றை திறந்தனர். அவர்கள் பக்கோடா தயார் செய்து அவ்வழியாக சென்றவர்களுக்கு வழங்கினர்.
பிரதமர் மோடியை கேலி செய்யும் வகையில் பட்டம் பெறும் போது அணியும் ஆடையை அணிந்த வண்ணம் அவர்கள் தங்களுடைய பக்கோடா கடையில் விற்பனை மற்றும் தயாரிப்பில் ஈடுபட்டனர்.
‘மோடி பக்கோடா, அமித் ஷா பக்கோடா, எடியூரப்பா பக்கோடா’ என கோஷம் முழங்கியவாறு கடையை நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.