500 மதுக்கடை மூடல் பட்டியலில் இவை இரண்டையும் சேர்த்துக் கொள்ளுங்கள் - தமிழக அரசுக்கு விஷால் கோரிக்கை-

by Isaivaani, Feb 5, 2018, 20:00 PM IST

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் அன்று மூடவிருக்கும் 500 மதுக்கடைகளின் பட்டியலில் வண்ணாரப்பேட்டை & திருவற்றியூர் வழியே இடையூறாக உள்ள இரண்டு மதுக்கடைகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என தமிழக அரசுக்கு நடிகர் விஷால் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 2016ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று நான்காவது முறையாக முதல் அமைச்சராக பதவி ஏற்ற புரட்சித் தலைவி அம்மா அவர்கள் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று உறுதியளித்து அதனை தொடங்கியும் வைத்தார். அமரர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் 24ம் தேதி 500 மதுக்கடைகளை தமிழக அரசு மூடவிருப்பதாக தகவல் என செய்திகள் வெளியாகிறது. இது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று.

ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட புது வண்ணாரப்பேட்டை & திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் க்ராஸ் ரோட் ஜங்ஷன் பகுதியில் அமைந்துள்ள இரண்டு மதுக்டைகள் அங்கிருக்கும் பொதுமக்களுக்கு மிகவும் இடையூறாக இருக்கின்றன. இந்த மதுக்கடைகளால் பெண்களும் மாணவர்களும் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். இந்த மதுக்கடைகளை மூடச்சொல்லி அடிக்கடி போராட்டங்கள் நடைபெற்றாலும் அரசு இன்னும் அவற்றுக்கு செவி சாய்க்கவில்லை.

எனவே மூடவிருக்கும் 500 மதுக்கடைகள் பட்டியலில் இந்த மதுக்கடைகளையும் சேர்க்க ஆவண செய்யுமாறு தமிழக அரசையும் ஆர்கே நகர் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் உயர் திரு. தினகரன் அவர்களையும் கேட்டுக் கொள்கிறேன். இதேபோல், தமிழ்நாடு முழுக்கவிருக்கும் பிரச்னைக்குரிய, பொதுமக்களுக்கும் மாணவர்களுக்கும் இடையூறாக இருக்கும் மதுக்கடைகளையும் இந்த பட்டியலில் சேர்க்க தமிழக அரசை வேண்டிக்கொள்கிறேன்.

இவ்வாறு விஷால் அதில் கூறியிருந்தார்.

You'r reading 500 மதுக்கடை மூடல் பட்டியலில் இவை இரண்டையும் சேர்த்துக் கொள்ளுங்கள் - தமிழக அரசுக்கு விஷால் கோரிக்கை- Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை