டிடிவி தினகரன் அணிக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க மாநில தேர்தல் ஆணையத்திற்கு தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட முடியாது என தெரிவித்துள்ளது.
டிடிவி தினகரன் சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனையடுத்து, குக்கர் சின்னத்தை தனது அணி தொடர்ந்து பயன்படுத்த அனுமதி கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இரட்டை இலை சின்னம் கோரி தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு வரும் வரை, தனது அணி அதிமுக அம்மா என்ற பெயரையும், குக்கர் சின்னத்தையும் தொடர்ந்து பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
அவரது மனுவை விசாரணைக்கு ஏற்ற உயர்நீதிமன்றம், இதுதொடர்பாக பதில் அளிக்கும்படி தலைமை தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது. இந்நிலையில், தலைமை தேர்தல் ஆணையம் தனது பதில் மனுவை இன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
அதில், டிடிவி தினகரன் அணிக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க மாநில தேர்தல் ஆணையத்திற்கு தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட முடியாது என தெரிவித்துள்ளது.
உள்ளாட்சி தேர்தல் மாநில தேர்தல் ஆணையமே நடத்துவதால் சின்னம் குறித்து மாநில தேர்தல் ஆணையமே முடிவு செய்யும். எனவே, டிடிவி தினகரன் கோரிக்கையை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் தலைமை தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.