அச்சம்.. பீதி .. கோபம்.. வருத்தம்..! இலங்கை குண்டு வெடிப்பு சூத்திரதாரி சஹ்ரான் ஹசீமின் ஊரான காத்தான்குடி நிலவரம்

Lanka serial bomb blast master mind Zahran hasims native kattankudi situation today

Apr 28, 2019, 10:27 AM IST

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு நகர் அருகே கடற்கரையோரம் தனித் தீவு போல் அமைந்துள்ள சிறு நகரம் தான் காத்தான்குடி. முழுக்க முழுக்க பெரும்பாலும் தமிழ் பேசும் முஸ்லீம்கள் வசிக்கும் இந்த ஊர் மசூதி ஒன்றில் 1990-ல் ஆயுதம் தாங்கிய கும்பல் ஒன்று கொடூர குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், தொழுகையில் ஈடுபட்டிருந்த 147 முஸ்லீம்கள் கொல்லப்பட்ட சம்பவம் காத்தான்காடு என்ற பெயரை உலக அளவில் உச்சரிக்கச் செய்தது. இலங்கை அரசு குற்றம் சாட்டினாலும், புலிகள் அதனை மறுத்தனர் என்பது தனிக்கதை. குதலுக்கு பின்னரும் அடிக்கடி வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்து வரும் ஒரு ஊராகவே காத்தான்குடி இருந்து வந்தது.

தற்போதும் காத்தான்குடி ஊரின் பெயர் இன்று உலகம் முழுக்க பிரபலமாகி விட்டது. இதற்குக் காரணம், கடந்த ஞாயிறன்று ஈஸ்டர் தினத்தில் இலங்கையில் பயங்கரவாதிகள் அரங்கேற்றிய கொடூர தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலும், அந்த தாக்குதலின் சூத்திரதாரியான சஹ்ரான் ஹசீம் என்ற படுபாவியின் சொந்த ஊர் தான் இந்த காத்தான்குடி என்பதேயாகும். சுமார் 50 ஆயிரம் மக்கள் வசிக்கும் இந்த சிறிய நகரம், தொடர் குண்டு வெடிப்பு நடந்த நாள் முதலே கடும் பீதி, அச்சம், கோபம், வருத்தம் என பெரும் சங்கடத்தில் உறைந்து போய் காணப்படுகிறது.

தொடர் குண்டு வெடிப்புக்கு மூளையாக செயல்பட்ட சஹ்ரான் ஹசீம் இங்கு தான் பிறந்து வளர்ந்தான். பெற்றோருக்கு பிறந்த 5 சகோதரர்களில் மூத்தவன். இளமை யிலேயே இஸ்லாமிய பழமைவாத கோட்பாடுகளில் தீவிரப்பற்று கொண்டு, தீவிரவாதக் கருத்துக்களை பிரசங்கம் செய்து, இளைஞர்களை மூளைச் சலவை செய்வதில் கைதேர்ந்தவன். தேசிய தவ்ஹீத் ஜமாத் என்ற தீவிரவாத அமைப்பை நிறுவி, ஒரு மசூதியையும் கட்டி அங்கு தான் மதப் பிரச்சாரத்தை பரப்பினான். இவனுடைய தீவிரவாதக் கருத்துக்களில் உடன்படாத காத்தான்குடியில் வசிக்கும் பெரும்பாலான முஸ்லீம்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், ஒரு கட்டத்தில் பெரும் மோதலே வெடித்துள்ளது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

இதனால் கடந்த 2017-ல் ஊரை விட்டு வெளியேறிய ஹசீம் எங்கிருக்கிறான் என்பதே தெரியாமல் இருந்து வந்தது. ஆனாலும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் தமது தீவிரவாத பிரச்சாரத்தை தொடர்ந்த சஹ்ரான், இடையில் ஐஎஸ் தீவிரவாத அமைப்புடனும் கைகோர்த்துள்ளான். தொடர்ந்து தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தாலும் சமூக வலைதளம் மூலம் கூட்டாளிகளை ஒருங்கிணைத்து, பயங்கர தொடர் குண்டு வெடிப்பை நிகழ்த்தி விட்டான். அதில் தானும் ஒரு மனித வெடிகுண்டாக மாறி உயிரையும் மாய்த்து பலர் பலியாகவும் காரணமாக இருந்துள்ளான்.

இந்நிலையில் தான் தொடர் குண்டு வெடிப்பின் சூத்திரதாரியே சஹ்ரான் ஹசீம் தான் என்பது தெரிய வந்து, அவன் ஊரான காத்தான்குடியை பாதுகாப்பு படையினர் முற்றுகையிட்டனர். இதனால் அந்த ஊர் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.


தங்களுக்கும், ஹசீமுக்கும் தொடர்பு அறுந்து இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தால் தாங்களும் அதிர்ந்து போய், மற்றவர்களைப் போல் வருத்தத்திலும், துக்கத்திலும் இருப்பதாகக் கூறுகின்றனர் காத்தான்குடி மக்கள். மேலும் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து கடையடைப்பு நடத்திய காத்தான்குடி வாசிகள், தங்கள் துக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக வீடுகளின் முன் கருப்புக்கொடி களையும் ஏற்றியுள்ளனர்.

ஆனாலும் காத்தான்குடிக்கும் ஹசீமுக்கும் இன்னும் தொடர்பு இருக்கலாம் என்று இலங்கை பாதுகாப்புப் படைக்கு சந்தேகம் நீடிக்கிறது. ஏனெனில் காத்தான்குடியில் வசித்து வந்த ஹசீமின் பெற்றோரும், இரு சகோதரர்களும் தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் நடப்பதற்கு 2 நாட்கள் முன்பு திடீரென மாயமானது தான் சந்தேகத்திற்கு காரணம். தற்போது அந்த ஊரில் வசிக்கும் ஹசீமின் சகோதரியான முகமது காசிம் மதானியாவிடம் விசாரணை நடத்த, தனக்கும் ஹசீமுக்கும் தொடர்பு இல்லை. அவன் செய்த இந்த மாபாதக செயலால் அதிர்ந்து போயுள்ளேன். இந்தக் கொடூர நிகழ்த்தியவன் உயிரோடு இருந்தால் என்ன? செத்தால் என்ன? என்ற ரீதியில் பதிலளித்துள்ளார்.


ஆனாலும் இலங்கை தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தால், காத்தான்குடி வாசிகள் தங்களுக்கு என்னென்ன ரீதியில் அச்சுறுத்தல்கள் வரப்போகிறதோ என்ற ஒரு வித அச்சம்,பீதி, கலக்கத்திலேயே நடமாடி வருகின்றனர்.

தவ்ஹித் ஜமாத், ஜமியத்தே மில்லாது இப்ராஹிம் அமைப்புகளுக்கு தடை- இலங்கை அதிபர் சிறிசேனா பிரகடனம்

You'r reading அச்சம்.. பீதி .. கோபம்.. வருத்தம்..! இலங்கை குண்டு வெடிப்பு சூத்திரதாரி சஹ்ரான் ஹசீமின் ஊரான காத்தான்குடி நிலவரம் Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை