பிரபல பாலிவுட் இயக்குனர் ராம்கோபால் வர்மாவை விஜயவாடா நகருக்குள் செல்லவிடாமல் தடுத்த ஆந்திர போலீசார், அவரை அப்படியே ஐதராபாத்துக்கு திருப்பி அனுப்பி விட்டார்கள்!
தமிழகத்தில் கோலோச்சிய எம்.ஜி.ஆரைப் போல் ஆந்திர அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக இருந்தவர் என்.டி.ஆர். என அழைக்கப்படும் என்.டி.ராமாராவ். அவர் தனது வாழ்க்கை வரலாறு புத்தகத்தை எழுதுவதற்காக வந்த லட்சுமி பார்வதியை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். இது என்.டி.ஆரின் குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை.
இதையடுத்து, 1995ம் ஆண்டு ஆகஸ்டில் அவரது ஆட்சியை கவிழ்த்து விட்டு, அவரது சொந்த மருமகன் சந்திரபாபு நாயுடு முதலமைச்சர் ஆனார். அவருக்கு குடும்பத்தினரும், கட்சியின் மூத்த நிர்வாகிகளும் ஆதரவு கொடுத்தனர். இதனால், ஆட்சியையும், கட்சியையும் பறிகொடுத்த என்.டி.ஆர், 1996ம் ஆண்டு ஜனவரியில் இறந்தார். அதன்பின், லட்சுமி பார்வதி ஒரு கட்சியை தொடங்கினார். ஆனால், சந்திரபாபு நாயுடுவிடம் அரசியல் செய்ய முடியாமல் அவர் முடங்கிப் போனார்.
இந்நிலையில், ஆந்திராவில் மக்களவை தேர்தலுடன், சட்டசபை தேர்தலும் ஏப்ரல் 11ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலை மனதில் வைத்து ஏற்கனவே என்.டி.ஆர். வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுத்தனர். அதில் என்.டி.ஆரின் மகன் பாலகிருஷ்ணா அவரது வேடத்தில் நடித்தார். பிரகாஷ்ராஜ், வித்யாபாலன் இந்த படம் நன்றாக ஓடியது.
இதற்கிடையே, அடிக்கடி சர்ச்சையை கிளப்பும் படங்களை எடுக்கும் பாலிவுட் இயக்குனர் ராம்கோபால் வர்மா, ‘‘லட்சுமியின் என்.டி.ஆர்’’ என்ற பெயரில் என்.டி.ஆர்.
வாழ்க்கையைப் பற்றிய படம் எடுத்தார். இந்த படம் தெலங்கானாவில் வெளியாகி விட்டது. ஆனால், தெலுங்குதேசம் அதை எதிர்த்து ஐகோர்ட்டுக்கு சென்று தடை வாங்கியதால், ஆந்திராவில் வெளியாகவில்லை. தற்போது மே 1ம் தேதி, இந்த படத்தை வெளியிட உள்ளனர்.
இந்த சூழலில், இந்த திரைப்படம் தொடர்பாக ஆந்திராவில் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்த விஜயவாடாவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் ரூம் புக் பண்ணினார் ராம்கோபால் வர்மா. ஆனால், அந்த ஓட்டல் திடீரென பின்வாங்கி விட்டது. இதையடுத்து, ஏப்ரல் 28ம் தேதி ஞாயிறு மாலை 4 மணிக்கு, விஜயவாடாவில் பிபுலா சாலையின் மத்தியில் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தப் போவதாக ட்விட்டரில் ராம்கோபால் வர்மா அறிவிப்பு வெளியிட்டார்.
இதற்காக அவர் 28ம் தேதி மதியம் விமானம் மூலம் விஜயவாடாவுக்கு வந்தார். ஆனால், அவர் விமான நிலையத்தில் இருந்து வெளியே வரும் போது ஆந்திர போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். பின்னர், அவரை தங்கள் பிடியில் வைத்திருந்து, மீண்டும் ஐதரபாத்துக்கே விமானத்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர். இது பற்றி போலீசாரிடம் கேட்ட போது, ‘‘அவர் சாலையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தினால் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதால், அவரை திருப்பி அனுப்ப போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார்’’ என்றனர்.
இதையடுத்து, ராம் கோபால் வர்மா, ஐதராபாத்தில் செய்தியாளர்களை சந்திக்க திட்டமிட்டிருக்கிறார். லட்சுமியின் என்.டி.ஆர். திரைப்படத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவையும், அவருக்கு நெருக்கமான தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகிகளையும் கடுமையாக விமர்சித்து சித்தரித்துள்ளதாகவும், அதனால் ராம்கோபால் வர்மாவுக்கு ஆந்திர போலீஸ் அனுமதி அளிக்கவில்லை என்றும் தெரிகிறது.