சாமியர் குர்மீத் சிங்குக்கு இசட் ப்ளஸ் கறுப்புப்பூனைப் படை பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த 7 பேர் குர்மீத்தை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
குர்மீத் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதும், அவரை பஞ்ச்குலா சி.பி.ஐ நீதிமன்றத்தில் இருந்து ரோக்டக் மாவட்டத்தில் உள்ள சிறைக்கு கொண்டு செல்லும் பணி விரைவாக நடந்து வந்தது. ஹெலிகாப்டரில் அவரை ஏற்ற முயற்சித்த போது, கறுப்புப் பூனைப்படை வீரர்கள் அவரை கைது செய்ய விடாமல் தடுத்தனர். அத்துடன், ஐ.ஜி பதவி வகிக்கும் போலீஸ் உயரதிகாரியுடன் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டுள்ளனர். குர்மீத்தை வாகனத்தில் ஏற்றிய போது, 'எங்கள் தந்தையை கொண்டு செல்ல விட மாட்டோம்' எனக் கூறி வாகனத்தில் இருந்து அவரை வெளியேற்ற முயன்றிருக்கின்றனர்.
தொடர்ந்து இந்த 7 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் கடந்த 7 ஆண்டுகளாக குர்மீத்துக்கு பாதுகாவலர்களாக இருந்து வருகின்றனர். உள்நோக்கத்துடன் இப்படி செயல்பட்டார்களா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த 7 வீரர்கள் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.