உலக அளவில் ராணுவத்திற்காக கடந்த 2018ம் ஆண்டு அதிகமாக செலவழித்த நாடுகளின் வரிசையில் இந்தியா 4வது இடத்தைப் பிடித்துள்ளது.
இந்தியா தற்போது ராணுவத்திற்கு, ரபேல் போர் விமானங்கள், போர்க்கப்பல்கள், ஹெலிகாப்டர்கள், இயந்திர துப்பாக்கிகள் என்று தொடர்ச்சியாக வாங்கத் தொடங்கியுள்ளது. ஏற்கனவே ராணுவத் தளவாடங்கள் எல்லாம் மிகவும் பழசாகி மோசமான நிலையில் உள்ளதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில் ராணுவத்திற்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது.
கடந்த 2018ம் ஆண்டில் உலக அளவில் ராணுவத்திற்கு அதிகமாக செலவழித்த நாடுகளின் வரிசையில் இந்தியா 4வது இடத்தில் உள்ளது. இது பற்றி, ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் என்ற அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
உலக அளவில் அமெரிக்கா, சீனா, சவுதி அரேபியா, இந்தியா, ரஷ்யா என்ற வரிசையில் 2018ல் ராணுவத்திற்கு அதிகமாக செலவழித்துள்ளன. அமெரிக்கா ராணுவச் செலவை 4.6 சதவீதம் உயர்த்தி 649 பில்லியன் டாலர் செலவிட்டிருக்கிறது.
சீனா 5 சதவீதம் உயர்த்தி 250 பி்ல்லியன் டாலர் செலவிட்டுள்ளது. சவுதி அரேபியா 67.6 பில்லியன் டாலர் என்ற அளவிலும், இந்தியா 66.5 பில்லியன் டாலர் என்ற அளவிலும் ராணுவத்திற்கு செலவிட்டுள்ளன.
ஒரு பில்லியன் என்பது நூறு கோடி. அந்த வகையில் இந்தியா ராணுவத்திற்கு 2018ம் ஆண்டில் 6650 கோடி டாலர், அதாவது கிட்டத்தட்ட 50 ஆயிரம் கோடி செலவிட்டிருக்கிறது.