நாடுமுழுவதும் இஸ்லாமிய பெண்கள் புர்கா அணிய தடைவிதிக்க வேண்டும் என்று சிவசேனா, பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளை அடுத்து, அந்நாட்டின் பாதுகாப்பு கருதி, அண்மையில் அதிபர் சிறிசேன அறிக்கை வெளியிட்டார். அதில், நாட்டின் பாதுகாப்பு நலனைக் கருத்தில் கொண்டு, முகங்களை மறைக்கும் அல்லது மூடும் வகையிலான உடைகளை அணிந்து செல்ல தடைவிதிக்கப் படுவதாகவும், இஸ்லாமிய பெண்கள் புர்கா அணியவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இதை போன்ற, தடை உத்தரவை இந்தியாவிலும் பிறப்பிக்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் சிவசேனா கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக, சிவ சேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடானா சாம்னா செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது, ‘இலங்கையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலின் எதிரொலியாகப் பாதுகாப்பு காரணங்களுக்காக முகத்தை மறைக்கும் ஆடைகளுக்குத் தடை விதித்துள்ளது அந்நாட்டு அரசு. இது போல், இந்தியாவிலும் பயங்கரவாதிகள் முகத்தை மறைத்துத் தாக்குதல் நடத்துவதைத் தடுக்கும் வகையில் நாடுமுழுவதும் இஸ்லாமிய பெண்கள் புர்கா அணியத் தடைவிதிக்க வேண்டும். அதனுடன், முகத்தை மறைக்கும் ஆடைகளுக்கும் தடை செய்ய வேண்டும். முத்தலாக்கை தடை செய்தது போல் பொது இடங்களில் புர்கா அணிவதைத் தடை செய்வதும் அவசியமான ஒன்று' என பிரதமரிடம் சிவசேனா கோரிக்கை விடுத்துள்ளது.
அயோத்தியில் முதல்முறையாக நரேந்திர மோடி தனது தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கும் நிலையில், சிவசேனாவின் இந்த கோரிக்கை தற்போது பயங்கர சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதற்கு, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.