மத்தியில் மீண்டும் மோடி ஆட்சிதான்! தமிழகத்தில் தி.மு.க.வுக்கு அமோகம்!!

NDA set to return to power, predict most exit polls

May 19, 2019, 21:17 PM IST

தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் பலவற்றிலும் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரும்பான்மை வெற்றி கிடைக்கும் என்று கூறப்பட்டிருக்கிறது. ஆனால், தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியே அதிக இடங்களை கைப்பற்றும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளது. ஓட்டு எண்ணிக்கை வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கிடையே, இன்று மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்ததும், 6.30 மணிக்கு தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகின. அதில் பெரும்பாலான கருத்து கணிப்புகளில் பா.ஜ.க. கூட்டணிக்கு பெரும்பான்மை தேவையான 272க்கு அதிகமான இடங்கள் கிடைக்கும் என்றும், மீண்டும் பிரதமராக மோடியே வருவார் என்றும் தெரிய வந்துள்ளது.
ரிபப்ளிக் டி.வி மற்றும் சி ஓட்டர்ஸ் கணிப்பின்படி, பா.ஜ.க. அணிக்கு 287, காங்கிரஸ் அணிக்கு 128, மற்றவை 127 இடங்கள் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
டைம்ஸ் நவ்- விஎம்ஆர் கருத்துக்கணிப்பில் பா.ஜ.க. கூட்டணி 306, காங்கிரஸ் கூட்டணிக்கு 142, மற்றவை 94 தொகுதிகளிலும் வெற்றிப் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்.டி.டி.வி கணிப்பில் பா.ஜ.க. 302, காங்கிரஸ் 132, மற்றவை 104 இடங்களில் வெற்றி பெறும் என கூறப்பட்டிருக்கிறது.
அதே சமயம், நியூஸ் நேஷன் டி.வி. கணிப்பில் பா.ஜ.க. 286, காங்கிரஸ் 122, மற்றவை 134 இடங்கள் கிடைக்கும் என கூறப்பட்டிருக்கிறது. இந்த கணிப்புகளி்ல், பா.ஜ.க. கூட்டணிக்கே பெரும்பான்மை இடங்கள் கிடைக்கும் என தெரிய வந்திருக்கிறது. ஆனால், நியூஸ் எக்ஸ் டி.வி. கணிப்பில் பா.ஜ.க.அணிக்கு 242 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்றும், காங்கிரஸ் 164, மற்றவை 136 இடங்களை கைப்பற்றும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை, திமுக கூட்டணியே நாடாளுமன்றத் தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றும் தேர்தலுக்கு பிந்தைய கணிப்புகளில் தெரிய வந்திருக்கிறது. தமிழகத்தில் வேலூர் தவிர்த்து 38 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. இந்தியா டுடே கருத்துக்கணிப்பில் அதிமுக கூட்டணிக்கு 0 முதல் 4 தொகுதிகளும், திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு 34 முதல் 38 தொகுதிகளும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல், டைம்ஸ் நவ் கணிப்பில் தி.மு.க. அணிக்கு 29, அ.தி.மு.க. அணிக்கு 9 இடங்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம், தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு எதிராக மக்கள் மனநிலை இருப்பது வெளிப்படுகிறது என்று கூறலாம். அல்லது அ.தி.மு.க. வாக்குகளை டி.டி.வி. தினகரன் பெருமளவு பிரிப்பதால் தோல்வியை தழுவுகிறது என்றும் சொல்லலாம்.
இருந்தாலும் தேர்தலுக்கு பிந்தைய கணிப்புகளை நாம் உறுதியாக நம்ப முடியாது. ஏனெனில், 2004ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க.வே பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று பல கருத்து கணிப்புகள் தெரிவித்தன. ஆனால், அந்த தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிதான் ஆட்சி அமைத்தது குறிப்பிடத்தக்கது.

You'r reading மத்தியில் மீண்டும் மோடி ஆட்சிதான்! தமிழகத்தில் தி.மு.க.வுக்கு அமோகம்!! Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை