மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுக கூட்டணி படுதோல்வியைச் சந்தித்தாலும், டெல்லி பாஜக வட்டாரத்தில் அக்கட்சிக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் உற்று நோக்க வைத்துள்ளது. அதிலும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற தலைமைப் பதவியில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தை ஓரம் கட்டி விட்டு முதல்வர் என்ற அந்தஸ்தில் உள்ள கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிச்சாமிக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவமும் அதிமுகவினரிடையே பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், முதலமைச்சர் பதவி பறிக்கப்பட்டதால் தர்மயுத்தம் நடத்தி கட்சியில் தனி அணியை ஏற்படுத்தினார் ஓ.பன்னீர்செல்வம். அப்போது பிரதமர் மோடி மற்றும் டெல்லி பாஜக தலைவர்களின் முழு ஆசி ஓபிஎஸ்சுக்குத் தான் இருந்தது. எப்படியாவது ஓபிஎஸ் பக்கம் கட்சியை அணி திரட்டுவதற்கு பல வழிகளிலும் பாஜக உதவியது.
கூவத்தூரில் அதிமுக எம்எல்ஏக்கள் பத்திரமாக தங்கவைக்கப்பட்டு, சசிகலா முதல்வராகப் போகிறார் என்ற நிலைமை உருவானது. அப்போது திடீரென சொத்துக் குவிப்பு வழக்கு அப்பீல் மனு மீதான உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவசரமாக வெளியிட வைத்து சசிகலாவை பெங்களூரு சிறைக்கு அனுப்பி வைத்ததிலும் பாஜகவின் கைங்கர்யம் இருந்தது உண்மை தான். கடைசியில் எடப்பாடி முதல்வராகி, டிடிவி தினகரனின் கை ஸ்ட்ராங் ஆனதைப் பொறுக்காமல் அவரையும் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் முயன்றார் என்ற வழக்கில் திகார் சிறையில் அடைக்க வைக்கப்பட்டதிலும் பாஜகவுக்கு பங்கு இல்லாமலில்லை.
பின்னர் டிடிவி,சசிகலா மற்றும் அவருடைய குடும்பத்தினரையே ஓரம் கட்டச் செய்து, ஓபி எஸ்-இபிஎஸ் அணிகள் இணைப்புக்கு ஆலோசனை கூறியதும் பாஜக தான்.இரு அணிகள் இணைப்புக்குப் பின் அதிமுக அரசுக்கு பல சோதனைகள் வந்தாலும் 2 ஆண்டுகளுக்கு மேலாக அதிமுக அரசுக்கு முட்டுக் கொடுத்து வருவது மத்திய பாஜக அரசு தான் என்பது நாடறிந்த விஷயம்.
அப்போதெல்லாம் டெல்லி வட்டாரத்தில் செல்வாக்காக திகழ்ந்தவர் ஓபிஎஸ் தான். ஆனால் மக்களவைத் தேர்தல் கூட்டணி ஏற்பாடுகள் மும்முரமானவுடனே ஓபிஎஸ்சை நைசாக ஓரம் கட்டத் தொடங்கினார் எடப்பாடி . டெல்லியுடனான தொடர்புக்கு தங்கமணி, வேலுமணி அன்கோவை பயன்படுத்தத் தொடங் கினார் எடப்பாடி.தமிழகத்திலும் பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடனான கூட்டணிப் பேச்சுக்களிலும் ஓ பிஎஸ் பின் தள்ளப்பட்டார். அப்போதே கூட்டணி உடன்பாட்டில் கையெழுத்திட மட்டும் என்னை பொம்மை போல் பயன்படுத்து கின்றனர் என்று ஓபிஎஸ் முணுமுணுத்ததாகவும் தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் தான் தேர்தல் முடிந்த பின், டெல்லியில் பாஜக தரப்பு கொடுத்த விருந்திலும் சரி, நேற்று பிரதமரை தேர்வு செய்ய நடந்த பாஜக கூட்டணிக் கட்சிகளின் எம்.பி.க்கள் மற்றும் தலைவர்கள் கூட்டத்திலும் சரி, எடப்பாடி தான் முன்னிலைப்படுத்தப்படுகிறார். நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடந்த கூட்டத்தில் மோடியுடன் கூட்டணித் தலைவர்கள் அமர்ந்த வரிசையில் எடப்பாடிக்கு இடம் கொடுக்கப்பட்டது. ஓபிஎஸ்சோ, பத்தோடு பதினொன்றாக பிற தலைவர்களுடன் அமர வைக்கப்பட்டார். இதே போன்று ஆட்சி அமைக்க உரிமை கோரி குடியரசுத் தலைவரை மோடி சந்திக்கச் சென்ற போதும் எடப்பாடி யார் தான் உடன் சென்றார். டெல்லியில் எடப்பாடிக்கு கொடுக்கப்பட்டு வரும் முக்கியத்துவம் ஓபிஎஸ் ஆதரவாளர்களை அதிருப்தியடையச் செய்துள்ளது.
அதிமுகவின் ஒருங்சிணைப்பாளர் என்ற தலைமைப் பொறுப்பில் ஓ.பன்னீர்செல்வம் இருக்கும் போது, எடப்பாடியை எப்படி முன்னிறுத்தலாம் என்று அவரது ஆதரவாளர்கள் முணுமுணுக்க ஆரம்பித்துள்ளனர். எடப்பாடிக்கு பாஜக முக்கியத்துவம் கொடுப்பதன் பின்னணிக்கு என்ன காரணம்? என்றும் ஓபிஎஸ் தரப்பு ஆராயத் தொடங்கியுள்ளது.