ஆந்திராவில் சட்டமன்றத் தேர்தலில் வென்றுள்ள நடிகை ரோஜாவுக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து பிரபலமான நடிகை ரோஜா. 1991ம் ஆண்டு முதல் 2002ம் ஆண்டு வரை திரையுலகில் ஜொலித்து வந்த நடிகை ரோஜா, 1999ம் ஆண்டு அரசியலுக்கு வந்தார்.
அப்போது சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்தார்.
பிரபலமான நடிகையாக இருந்ததால், அவருக்கு மகளிர் அணி தலைவி பதவியை தந்தார் சந்திரபாபு நாயுடு. அதன்பிறகு, பத்து ஆண்டுகள் அதே கட்சியில் ரோஜா இருந்தார். 2009ம் ஆண்டில் அவருக்கு எம்.எல்.ஏ. சீட் கொடுத்தார் நாயுடு. ஆனால், ரோஜாவால் வெற்றி பெற முடியவில்லை. இதையடுத்து, அவருக்கு கட்சியிலும் மதிப்பு குறைந்தது.
இதன்பின், 2009ம் ஆண்டிலேயே அவர் ஒய்.எஸ்.ஆர். கட்சிக்கு தாவினார். அந்த கட்சியில் 2014ம் ஆண்டு நகரி சட்டமன்றத் தொகுதியில் சீட் கொடுத்தார் அந்த கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி. அந்த தேர்தலில் ரோஜா வென்று எம்.எல்.ஏ. ஆனார். ஆனால், கட்சி ஆட்சிக்கு வரவில்லை. இப்படியாக கட்சி ஜெயிக்கும் போது தான் தோற்று, தான் ஜெயிக்கும் போது கட்சி தோற்கும் ராசியை பெற்றிருந்தார்.
ஆனால், இந்த முறை அவரது கனவு பலிக்கிறது. நடந்து முடிந்த ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் நகரி தொகுதியில் மீண்டும் போட்டியிட்ட ரோஜா, தெலுங்குதேசம் வேட்பாளர் கலிபானு பிரகாஷை தோற்கடித்துள்ளார். இந்த முறை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்தான் அமோக வெற்றி பெற்றுள்ளது. அதன் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டிதான் முதலமைச்சராக வரும் 30ம் தேதி பதவியேற்கிறார்.
அமைச்சர்கள் தேர்வு மற்றும் பதவியேற்பு விழா குறித்த ஆலோசனையில் ஜெகன்மோகன் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், இரண்டாவது முறையாக நகரியில் வெற்றி பெற்றுள்ள நடிகை ரோஜாவுக்கும் அமைச்சர் பதவி கிடைக்கும் என தெரிகிறது. அமைச்சர்கள் பட்டியலில் அவருக்கு மின்சாரத் துறை கிடைக்கும் என்று தெலுங்கு பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
நடிகை ரோஜா, கடைசியாக தமிழில், என்வழி, தனிவழி படத்தில் நடித்திருந்தார். மேலும், தொலைக்காட்சிகளில் சில ஷோக்களை நடத்தி வந்தார், அவரது கணவர் டைரக்டர் ஆர்.கே.செல்வமணி. இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.